திண்டுக்கல் பேருந்து நிலையம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரி சலுக்கு தீர்வுகாண பேருந்து நிலையத்தை நகருக்கு வெளியே இடமாற்றம் செய்யும் திட்டம் சாத்தியமில்லாத நிலையில் உள்ளது. இதனால் நகரில் போக்கு வரத்து நெரிசல் தொடர்கிறது.
மாவட்ட தலைநகரான திண்டுக்கல்லுக்கு 500-க்கும் மேற்பட்ட பேருந்துகள் தினசரி ஆயிரத்திற்கு மேற்பட்ட முறை நகருக்குள் வந்து செல்கின்றன. நகரின் மையப்பகுதியில் ஆறு ஏக்கர் பரப்பில் இப்பேருந்து நிலையம் அமைந்திருந்தாலும், முறையான வசதிகள் இல்லாததால் பேருந்துகள் வந்து செல்வதில் சிக்கல் உள்ளது. எந்த திசையில் இருந்து பேருந்துகள் வந்தாலும் நகருக்குள் பாதி தூரம் கடந்துதான் பேருந்து நிலையத்தை அடைய முடியும். இதனால் வரும் வழியில் நகருக்குள் ஆங்காங்கே தினமும் போக்குவரத்து நெரிசல் என்பது வழக்கமான ஒன்றாகி விட்டது.
இதிலும் மதுரை, வத்தலகுண்டு பகுதியில் இருந்து திண்டுக்கல் பேருந்து நிலையம் வரும் பேருந்துகள் பல வளைவுகள் வழியாக, பத்துக்கும் மேற்பட்ட வேகத்தடைகளை கடந்து குறுகிய சாலைகளில் புகுந்து பேருந்து நிலையம் வந்தடைய வேண்டிய நிலை உள்ளது. இதனால் மதுரையில் இருந்து சேலம், ஓசூர் உள்ளிட்ட தொலைதூர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் புறவழிச்சாலை வழியே திண்டுக்கல் நகருக்குள் நுழையாமலேயே சென்றுவிடுகின்றன. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள காலை மாலை நேரங்களில் நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக சாலை சந்திப்புக்களில் போக்கு
வரத்து சிக்னல்கள் இயங்காததால் வாணிவிலாஸ் மேடு பகுதி உள்ளிட்ட இடங்களில் நாள் முழுவதும் போக்கு வரத்து நெரிசல் காணப்படுகிறது.
எதிர்பார்க்கப்பட்ட தீர்வு
திண்டுக்கல் நகரின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நகரின் மத்தியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தை நகருக்கு வெளியே இடமாற்றம் செய்வதுதான் ஒரே தீர்வு என வர்த்தக சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தும் இதுவரை எந்தவித பலனும் இல்லை.
திண்டுக்கல் மாநகராட்சியை இதனை சுற்றியுள்ள பத்து ஊராட்சிகளை ஒன்றிணைத்து எல்லை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால் நகராட்சியாக இருந்த திண்டுக்கல், மாநகராட்சி என பெயர் மாறியதே தவிர எல்லை விரிவாக்கம் நடைபெறவில்லை. எல்லை விரிவாக்கப் பணிகள் முடிந்திருந்தால், திண்டுக்கல் புறநகர் பகுதி விரிவாக்கத்தால் மாநகராட்சி பகுதிக்
குள் வந்த ஊராட்சிகளுக்கு சொந்தமான இடத்தில் பேருந்து நிலையத்தை அமைக்க வாய்ப்பாக இருந்திருக்கும். அவ்வாறு விரிவாக்கம் செய்யப்படாததால் திண்டுக்கல் பேருந்து நிலையமும் நகருக்கு வெளியே செல்ல சாத்தியமில்லாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.
திண்டுக்கல் நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண திண்டுக்கல் பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய மாற்று வழிகளை யோசித்து நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்பது திண்டுக்கல் நகர மக்கள், வர்த்தகர்களின் தொடர் கோரிக்கையாக பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதற்கு தீர்வுகாண அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.