தமிழகம்

அரசுப் பணத்தில் முதல்வருக்கு ஆதரவான விளம்பரங்கள் செய்ய தடை கோரி திமுக வழக்கு: ஜெயலலிதாவுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

செய்திப்பிரிவு

சட்டப்பேரவை பொதுத்தேர்தலை மனதில்கொண்டு முதல்வர் ஜெய லலிதாவுக்கு அரசுப் பணத்தில் சுயவிளம்பரம் செய்வதற்கு தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற நீதிபதி நேற்று உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில், திமுக தலைமை நிலைய முதன்மைச் செயலாளர் துரைமுருகன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்ப தாவது: தமிழகத்தில் தற்போது நடைபெறும் அதிமுக ஆட்சிக் காலம் அடுத்த ஆண்டு மே 13-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற் குள் சட்டப்பேரவை பொதுத்தேர் தல் நடத்தி முடிக்கப்பட்டு புதிய ஆட்சி அமைய வேண்டும். தேர்தல் ஆணையத்தின் தேர்தல் அறிவிப்பு வெளியான நாளில் இருந்து நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும்.

இத்தேர்தலில் அரசுப் பணம், மனித ஆற்றல் உள்ளிட்ட அரசு இயந்திரம் ஆளும்கட்சிக்கு ஆதர வாக பயன்படுத்தப்படுகிறது. அரசுத் திட்டங்கள் தொடர்பான பேனர்கள், துண்டுப் பிரசுரங்கள், டிஜிட்டல் விளம்பரப் பலகைகள், குறும்படங்களை திரையிடுவதற் கான எல்சிடி தொலைக்காட்சிப் பெட்டிகள் பொருத்தப்பட்ட 32 வேன்கள், வீடியோ காட்சிகள் உள்ளிட்டவற்றின் மூலம் முதல்வ ருக்கு சுயவிளம்பரம் செய்யப்படு கிறது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டால், இது போன்ற பிரச்சாரங்களை மேற் கொள்ள முடியாது. அதனால், இப்போதே அரசுப் பணத்தில் அரசியல் பிரச்சாரம் செய்கின்றனர். அரசின் 4 ஆண்டு சாதனை என்ற பெயரில் முதல்வரை விளம் பரப்படுத்தும்படி மாவட்ட ஆட்சி யர்கள், உள்ளாட்சி அமைப்பு களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சுயவிளம்பரத்துக்காக அரசுப் பணத்தை செலவிட தடை விதிக்க வேண்டும். எனவே, இந்த விளம் பரங்களுக்காக இதுவரை செல விடப்பட்ட தொகையை முதல்வர் ஜெயலலிதாவிடம் வசூலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு, நீதிபதி சுந்தரேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜரானார். இந்த மனுவுக்கு 2 வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி முதல்வர் ஜெயலலிதா, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT