சிவகங்கையில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்கான பூமிபூஜையில் அமைச்சர் பாஸ்கரன், மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, எம்எல்ஏ நாகராஜன் பங்கேற்றனர். 
தமிழகம்

காவிரி - குண்டாறு திட்டத்திற்கு மத்திய அரசு நிதி தராவிட்டாலும் முழுமையாக செயல்படுத்துவோம்: அமைச்சர் ஜி.பாஸ்கரன்

இ.ஜெகநாதன்

‘‘காவிரி-குண்டாறு திட்டத்திற்கு மத்திய அரசு நிதி தராவிட்டாலும் முழுமையாக செயல்படுத்துவோம்,’’ என கதர்கிராமத் தொழில்கள் நலவாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தெரிவித்தார்.

சிவகங்கையில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ.1,752.73 கோடி மதிப்பிலான காவிரி கூட்டு குடிநீர்த் திட்டத்திற்கான பூமிபூஜை இன்று நடந்தது.

மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தார். எம்எல்ஏ நாகராஜன் முன்னிலை வகித்தார். அமைச்சர் பாஸ்கரன் பூமிபூஜையை தொடங்கி வைத்தார்.

குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பு பொறியாளர் குணசேகரன், செயற்பொறியாளர்கள் அயினான், தங்கரத்தினம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவிற்கு பிறகு அமைச்சர் ஜி.பாஸ்கரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காவிரி கூட்டு குடிநீர்த் திட்டம் சிவகங்கை மாவட்ட மக்களுக்கு மிகுந்த பயனளிக்கும்.

தேர்தல் நேரத்தில் முதல்வர் வெற்று அறிவிப்புகளை அறிவித்து வருவதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றனர். ஆனால் முதல்வர் அறிவித்ததோடு இல்லாமல் உடனடியாக நிதி ஒதுக்கி அந்த திட்டத்தை செயல்படுத்தி காட்டி வருகிறார்.

பயிர்க் கடன் ரத்து அறிவித்த சில நாட்களிலேயே விவசாயிகளின் கைகளில் அதற்கான ரசீது வந்துவிட்டது. எதிர்க்கட்சிகள் குறை கூறி கொண்டே இருக்கட்டும்.

காவிரி-குண்டாறு திட்டத்தை சில காரணங்களால் பிரதமர் மோடி தொடங்கி வைக்க முடியவில்லை. மேலும் இத்திட்டத்திற்கு மத்திய அரசு நிதி தராவிட்டாலும், நிதி ஒதுக்கி முழுமையாக செயல்படுத்தப்படும்.

முதல்வர் சொன்னதோடு இல்லாமல் எதையும் முடித்தும் காட்டுகிறார், என்று கூறினார்.

SCROLL FOR NEXT