திருநெல்வேலி மாவட்டத்தில் கோடை தொடங்குமுன்னரே 44 குளங்கள் வறண்டுள்ளதாக வேளாண்மைத்துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மாவட்டத்தில் 740 கால்வரத்து குளங்கள், 550 மானாவாரி குளங்கள் என்று மொத்தம் 1290 குளங்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதில் 75 கால்வரத்து குளங்களில் 3 மாதத்துக்கும், 380 கால்வரத்து குளங்களில் 2 மாதத்துக்கும், 217 கால்வரத்து குளங்களில் 1 மாதத்துக்கும் தேவையான நீர் உள்ளது. 14 கால்வரத்து குளங்கள் வறண்டுள்ளன.
இதுபோல் 18 மானாவாரி குளங்களில் 3 மாதத்துக்கும், 238 மானாவாரி குளங்களில் 2 மாதத்துக்கும், 264 மானாவாரி குளங்களில் 1 மாதத்துக்கும் தேவையான நீர் இருப்பு உள்ளது. 30 குளங்கள் வறண்டுள்ளன. மாவட்டத்திலுள்ள கிணறுகளில் சராசரியாக 1 மணி நேரம் முதல் 2 மணிவரை நேரம் பாசனம் மேற்கொள்ளும் அளவுக்கு நீர் உள்ளது.
மாவட்டத்தில் ஆண்டு இயல்பான மழையளவு 814.80 மி.மீ. நடப்பாண்டு பிப்ரவரி மாதம் வரை இயல்பான மழையளவு 80.4 மி.மீ. ஆனால் தற்போது வரை 349.91 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது.
தற்போது அணைகளில் 80.61 சதவிகிதம் நீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 60.7 சதவிகிதம் நீர் இருந்தது.
மாவட்டத்திலுள்ள அணைகளில் இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் விவரம் (அடைப்புக்குள் கடந்த ஆண்டு இதே காலத்தில் நீர்மட்டம்):
பாபநாசம்- 122.45 அடி (103.05 அடி), சேர்வலார்- 124.51 அடி (101.54 அடி), மணிமுத்தாறு- 109.40 அடி (99.65 அடி), வடக்குபச்சையாறு- 46.35 அடி (44 அடி), நம்பியாறு- 13.35 அடி (13.31 அடி), கொடுமுடியாறு- 18.50 அடி (25 அடி).
மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் இதுவரை நெல் 38427 ஹெக்டேரிலும், சிறுதானியங்கள் 602 ஹெக்டேரிலும், பயறுவகை பயிர்கள் 7494 ஹெக்டேரிலும், பருத்தி 663 ஹெக்டேரிலும், கரும்பு 33 ஹெக்டேரிலும், எண்ணெய் வித்து பயிர்கள் 474 ஹெக்டேரிலும் என்று மொத்தம் 47,513 ஹெக்டேர் பரப்பளவில் பல்வேறு பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது.
2020-2021-ம் ஆண்டு மொத்த பயிர்கள் சாகுபடி இலக்கு பரப்பு 59,700 ஹெக்டேராகும். நடப்பு பிசான பருவத்தில் 37 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. போதிய மழை பெய்ததாலும், நீர் நிலைகளில் திருப்திகரமாக தண்ணீர் இருப்பு உள்ளதாலும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் விவசாயிகள் பிசான நெல் சாகுபடியில் ஈடுபட்டனர்.
இதனால் இலக்கை தாண்டி 38247 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 36720 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது.