சாலை விதிமீறலில் ஏற்பட்ட வாக்கு வாதத்தில் காரை பிடித்து வைத்துக்கொண்டு, டிடி கேஸ் போட்டுவிடுவேன் என்று மிரட்டிய போக்குவரத்து உதவி ஆய்வாளர் கடவுளே வந்தாலும் காரை விடுவிக்கமாட்டேன் என பேசி பின்னர் 5000 ரூபாய் லஞ்சம் கேட்டு வாங்கும்போது லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
அஷோக் நகரில் வசிப்பவர் ஏழுமலை. சொந்தமாக டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது காரை ஓட்டும் ஓட்டுநர் நேற்று முன் தினம் இரவு தாம்பரத்திலிருந்து சவாரி ஏற்றிக்கொண்டு குரோம்பேட்டை நோக்கி வந்துள்ளார். குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் டிபி ஹாஸ்பிடல் அருகே ஓட்டுநர் யூ டர்ன் எடுத்தபோது அங்கு வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் கிருஷ்ணகுமார் தலைமையிலான போலீஸார் பிடித்துள்ளனர்.
காலரை மடக்கிய கிருஷ்ண குமாரிடம் ஓட்டுநர் தெரியாமல் திரும்பி விட்டேன் இனி அப்படி செய்ய மாட்டேன் என விட்டுவிடும்படி கூற விடுவதா? அபராதத்தை கட்டிவிட்டு போ எனக்கூறியுள்ளனர். சரி எவ்வளவு சொல்லுங்கள் கட்டிவிடுகிறேன் என அவர் கூற ஓ எவ்வள்வு இருந்தாலும் கட்டுவாயா சரி 1200 ரூபாய் கட்டிட்டு போ என்று கூறியுள்ளனர்.
சார் சாதாரண யூடர்ன் விவகாரம் அதற்கு 100 அல்லது 200 ரூபாய் அபராதம் போடலாம், என்னிடமும் அவ்வளவுதான் இருக்கு. 1200 ரூபாய் அபராதம் போடும் அளவுக்கு என்ன குற்றம் செய்தேன் என ஓட்டுநர் கேட்க அவ்வளவு திமிறா உனக்கு ரொம்ப பேசினாய் என்றால் டிடி கேஸ் போட்டுவிடுவேன் என்று கிருஷ்ணகுமார் மிரட்டியுள்ளார்.
“நான் மது அருந்தாத போது பொய்யான வழக்கு போடுவேன் என்று சொல்கிறீர்களே நியாயமா?” என ஓட்டுநர் கேட்க அப்படியா உன் காரை எப்படி இங்கிருந்து எடுத்துச் செல்கிறாய் பார்ப்போம் என்று கார் சாவியையும், லைசென்ஸையும் வாங்கி வைத்துக்கொண்டு போய் உரிமையாளரை கூட்டிட்டு வா என்று அனுப்பிவிட்டனர்.
ஓட்டுநர் வாகன உரிமையாளர் ஏழுமலையிடம் விவரத்தை கூறியுள்ளார். மறுநாள் காலை ஏழுமலை ஓட்டுநரை அழைத்துக்கொண்டு குரோம்பேட்டை ஸ்டேஷனுக்கு வந்துள்ளார். உதவி ஆய்வாளர் கிருஷ்ணகுமாரை பார்த்து மன்னிப்பு கேட்டு வாகனத்தை விடுவிக்கும்படி கேட்டுள்ளார். உன் டிரைவர் பேசிய பேச்சுக்கு அந்த ஆண்டவனே வந்தாலும் காரை விட மாட்டேன் என உதவி ஆய்வாளர் திட்டியுள்ளார்.
மீண்டும் மீண்டும் ஏழுமலை தன் நிலையைக்கூறி கார் ஒரு நாள் ஓடாவிட்டாலும் பெருத்த நஷ்டம் ஏற்படும் என கெஞ்சி கேட்டுள்ளார். அப்படியானால் ஒரு 5000 ரூபாய் கொடுத்துவிட்டு எடுத்துக்கொண்டு போ என உதவி ஆய்வாளர் கூறியுள்ளார். 5000 ரூபாயா? நேற்றே ரூ.1200 கொடுத்து காரை எடுத்து போயிருப்பேனே என்று கேட்க அது நேற்று இப்ப 5000 ரூபாய் கொடுத்தால் கார் ரிலீஸ் ஆகும் என்று கிருஷ்ணகுமார் கறாராக கூறியுள்ளார்.
இவருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்ட ஏழுமலை போய் பணத்தை எடுத்துக்கொண்டு வருகிறேன் என்று கூறியுள்ளார். போய் வா என கிருஷ்ணகுமார் அனுப்பியுள்ளார். ஸ்டேஷனை விட்டு வெளியில் வந்த ஏழுமலை நேராக லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி பாஸ்கரனிடம் நடந்ததைக் கூறி புகார் அளித்துள்ளார்.
அவரது உத்தரவுப்படி ரசாயனம் தடவிய 5000 ரூபாய் மதிப்புள்ள நோட்டுகளை ஏழுமலையிடம் கொடுத்தனுப்பி தயாராக ஸ்டேஷன் அருகில் மறைந்திருந்துள்ளனர். ஏழுமலை திட்டமிட்டப்படி ஸ்டேஷனுக்கு ரசாயனம் தடவிய நோட்டுடன் சென்று உதவி ஆய்வாளர் கிருஷ்ணகுமாரிடம் கொடுக்க அவர் பணத்தை வாங்கியபோது தயாராக இருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் மடக்கி பிடித்தனர்.
பின்னர் கிருஷ்ணகுமாரை கைது செய்த போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட கிருஷ்ணகுமார் 1988-ம் ஆண்டு பேட்ச் காவலர் ஆவார். சில ஆண்டுகளுக்கு முன் போக்குவரத்துத்துறைக்கு மாற்றல் ஆகி வந்துள்ளார்.