பெட்ரோல் - டீசல் விலை உயர்வு தர்மசங்கடமான சூழலை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சென்னை, தியாகராய நகரில் பட்ஜெட் தொடர்பாக தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்களின் கலந்துரையாடல் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், ''பெட்ரோல் விலை உயர்வு தர்ம சங்கடமானது. விலை உயர்வைக் குறைப்பதைத் தவிர என்ன காரணம் கூறினாலும் யாரையும் திருப்திப்படுத்த முடியாது. வேறு எந்த பதிலையும் மக்கள் ஏற்க மாட்டார்க்ள். விலை உயர்வு ஒரு மிகப்பெரிய பிரச்சினை.
இதற்கு பதில் கூறுவதைத் தவிர்த்து வருகிறேன். இந்த விவகாரத்தில் எந்த ஓர் அமைச்சராலும் யாரையும் சமாதானப்படுத்த முடியாது. ஏனெனில் இந்தியர்கள் அனைவரும் இந்தியர்களே. நானும் அவர்களில் ஒருவரே.
கச்சா எண்ணெயை வாங்கும் எண்ணெய் நிறுவனங்கள்தான் பெட்ரோல் - டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன. பெட்ரோல்- டீசல் மீதான வரியைக் குறைப்பது குறித்து மாநில அரசுகள் ஆலோசிக்க வேண்டும்.
விலைக் குறைப்பு குறித்து மத்திய, மாநில அரசுகள் அமர்ந்து பேச வேண்டும். நான் ஒரு தனி அமைச்சராக இதை முடிவு செய்ய முடியாது.
பெட்ரோல் - டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவருவது குறித்து அனைத்து மாநில அமைச்சர்களைக் கொண்ட ஜிஎஸ்டி கவுன்சில்தான் முடிவு செய்ய வேண்டும்.
இதன் மூலம் விலைக் குறைப்பை அமல்படுத்த முடியும்'' என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.