தமிழகம்

ரூ.25 லட்சம் வரை கடன்; 35% வரை மானியம்: கோவையில் பிப்.23-ல் சுய தொழில் கடன்மேளா

க.சக்திவேல்

மாவட்டத் தொழில் மையம் சார்பில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வரும் 23-ம் தேதி சுயதொழில் கடன்மேளா நடைபெற உள்ளது.

இதுதொடர்பாகக் கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

''கோவை மாவட்டத்தில் நகர்ப்புறம் மற்றும் கிராமப் புறங்களில் தொழில்முனைவோர்களை உருவாக்கும் வகையில் சுயதொழில் தொடங்க மூன்று பிரதான சுயதொழில் கடன் திட்டங்களை மாவட்டத் தொழில் மையம் செயல்படுத்தி வருகிறது.

புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தில் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் ரூ.5 கோடி வரை முதலீடு செய்து உற்பத்தி, சேவை தொழில்கள் தொடங்கலாம். இதில், 25 சதவீதம் (அதிகபட்சம் ரூ.50 லட்சம்) வரை நிலம், கட்டிடம், இயந்திரங்களுக்கு மானியம் கிடைக்கும். 3 சதவீதம் பின்முனை வட்டி மானியமும் உண்டு.

இரண்டாவதாக, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மிகாமல் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் வியாபாரம் மற்றும் சேவைத் தொழிலுக்கு ரூ.5 லட்சம் வரையும், உற்பத்தி தொழிலுக்கு ரூ.15 லட்சம் வரையும் விண்ணப்பிக்கலாம். இதில், 25 சதவீதம் வரை மானியம் (அதிகபட்சம் ரூ.2.50 லட்சம்) கிடைக்கும்.

மூன்றாவதாக, பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் உற்பத்திப் பிரிவில் ரூ.25 லட்சம் வரையிலும், சேவைப் பிரிவில் ரூ.10 லட்சம் வரையிலும் விண்ணப்பிக்கலாம். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் அல்லது படிக்காதவர்கள் உற்பத்திப் பிரிவில் ரூ.10 லட்சம் வரையிலும், சேவைப் பிரிவில் ரூ.5 லட்சம் வரையிலும் விண்ணப்பிக்கலாம்.

இதில், கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களுக்கு 35 சதவீதமும், நகர்ப் புறத்தில் 25 சதவீத மானியமும் வழங்கப்படும். எனவே, இந்த திட்டங்களுக்கான சிறப்பு லோன் மேளா மற்றும் விழிப்புணர்வு முகாம் வரும் 23-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகப் பொன்விழா அரங்கத்தில் நடைபெற உள்ளது. கடன் மேளாவுக்கு வருபவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை, கல்விச் சான்றிதழ், ஜாதிச் சான்று, விலைப் பட்டியல் (Quotation), திட்ட அறிக்கை அசல் ஆகியவற்றை எடுத்துவர வேண்டும்''.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT