பாடத்திட்டத்தை 20% மட்டுமே குறைத்து, தேர்தல் நேரத்தில், குறுகிய கால இடைவெளியில் +2, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதால் மாணவர்கள் தேர்ச்சி பாதிக்கப்படும், தேர்ச்சி பெறாமல் மன உளைச்சலால் ஒவ்வொரு வருடமும் தற்கொலை செய்து கொள்ளும் 10, 12-ம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை இந்த அவசரகதி தேர்வு அறிவிப்பால் அதிகரிக்க அரசு வழிவகுக்கக் கூடாது என ஜவாஹிருல்லா எச்சரித்துள்ளார்.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா இன்று வெளியிட்ட அறிக்கை:
கெரோனா நோய்த் தொற்றால் மூடப்பட்ட பள்ளிகள் திறந்து ஒரு மாதம் ஆகியும், முழுமையான கல்வி கற்றல் நிலைக்கு மாணவர்கள் இன்னும் திரும்பாததால் மே 3-ம் தேதி +2 பொதுத் தேர்வு நடைபெறும் என்று அறிவித்துள்ள தமிழக அரசின் அறிவிப்பு மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடும் செயலாகும்.
12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 50 சதவீதம் பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளதாக தமிழகக் கல்வித்துறை அறிவித்திருந்தது. ஆனால் உண்மையில் 40 சதவீதம் மட்டுமே குறைத்துள்ள கல்வித்துறை, கடினமான பாடங்களான வணிகவியல் மற்றும் கணிதம் பாடங்களில் 20 சதவீதம் மட்டுமே நீக்கப்பட்டு குறைவான அவகாசத்தில் மாணவர்களுக்கு பாடங்களை போதிப்பதால், மாணவர்களுக்கு முழுமையான புரிதல் கிடைககாமல் அவர்கள் தேர்வுக்குத் யாராவது மிகுந்த மன அழுத்தத்தை உருவாக்கும்.
மே 3-ம் தேதி பொதுத் தேர்வுக்கு இடையில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் இரண்டு வாரங்கள் கல்விப் பணி பாதிக்கும். இடையில் சனி, ஞாயிறு போன்ற அரசு விடுமுறை நாட்களும் வரும். மேலும் இதுவரை மாணவர்களுக்கு மாநில வினாத்தாள் மற்றும் வினா வங்கி எதுவும் அரசால் வழங்கப்படவில்லை.
ஆகவே, மாணவர்கள் பொதுத் தேர்வுக்குத் தயாராவதற்கு குறைந்தபட்சம் நான்கு மாதங்களாவது அவகாசம் வழங்கி சுலபமான வழிகளில், குறைந்தபட்ச வினாக்களுடன் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகாத வண்ணம் பொதுத் தேர்வை ஜூன் ஜூலை மாதங்களில் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அடுத்து அறிவிக்கப்பட உள்ள 10-ம் வகுப்பு பொதுத் தேர்வையும், மாணவர்களுக்கு போதிய கால அவகாசம் கொடுத்து ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
ஒவ்வொரு வருடமும் தற்கொலை செய்து கொள்ளும் 10, 12-ம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை இந்த அவசரகதி தேர்வு அறிவிப்பால் அதிகரிக்க அரசு வழிவகுக்கக் கூடாது என்று மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.