கரோனா ஊரடங்கில் தளர்வு மற்றும் வரத்து குறைவு காரணமாக ஈரோடு சந்தையில் மஞ்சள்விலை குவின்டால் ரூ.8 ஆயிரத்தை கடந்து விற்பனையாகிறது. ஏற்றுமதியின் அளவும் அதிகரிப்பதால், இந்த ஆண்டு மஞ்சளுக்கு நல்லவிலை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக மஞ்சள் வணிகர்கள் தெரிவிக்கின்றனர்.
ஈரோட்டில் 4 இடங்களில் நடக்கும் மஞ்சள் சந்தை மூலம் ஆண்டுக்கு ரூ.500 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெறுகிறது. கர்நாடகாவில் மைசூரு, தமிழகத்தில் ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை, கரூர், தருமபுரி, வேலூர், திருப்பூர் என பல்வேறு மாவட்டங்களில் விளையும் மஞ்சள் இங்கு விற்பனைக்கு எடுத்துவரப்படுகிறது.
2010 டிசம்பர் மாதத்தில், ஒரு குவின்டால் மஞ்சள் ரூ.18 ஆயிரத்துக்கு விற்பனையானதை அடுத்து மஞ்சள் சாகுபடியின் பரப்பு அதிகரித்தது. ஆனால், அடுத்த 2 ஆண்டுகளில் வரத்து அதிகரிப்பால் மஞ்சள் விலை குவின்டால் ரூ.3 ஆயிரமாகச் சரிந்தது. இதன் பின்னர், மஞ்சள் விலை சராசரியாக குவின்டால் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரம் வரை விற்பனையானது.
இந்நிலையில், கடந்த 10-ம்தேதிக்கு பிறகு மஞ்சள் விலை குவின்டாலுக்கு ரூ.8 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 2 ஆண்டுகளுக்குப் பின்னர், ஈரோடு மஞ்சள் சந்தையில் நேற்று புதுமஞ்சள் குவின்டாலுக்கு ரூ.8,888 என்ற புதிய உச்சத்தைத் தொட்டது. நேற்றைய மஞ்சள் சந்தையில் பழைய விரலி மஞ்சள் குவின்டால் விலை குறைந்தபட்சமாக ரூ.6,771-க்கும் அதிகபட்சமாக ரூ.8,499-க்கும் விற்பனையானது. கிழங்கு மஞ்சள் குவின்டால், அதிகபட்சமாக ரூ.7,909-க்கு விற்பனையானது.
மஞ்சள் விலை உயர்வு குறித்துஅனைத்து வணிகர் சங்க கூட்டமைப்பு முன்னாள் பொதுச் செயலாளரும், மஞ்சள் வணிகருமான வி.கே.ராஜமாணிக்கம் கூறியதாவது:
11 மாநிலங்கள்
இந்தியாவில் 11 மாநிலங்களில் மஞ்சள் விளைந்தாலும் தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிராவில் இருந்து அதிக அளவில் மஞ்சள் வரத்து உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்காததால், மஞ்சள் பயிரிடும் பரப்பளவு குறைந்துள்ளது. தமிழகத்தில் இரண்டரை லட்சம் ஏக்கரில் பயிரான மஞ்சள், தற்போது ஒரு லட்சம் ஏக்கராக சுருங்கியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் பயிரிடும் பரப்பு 15 ஆயிரம் ஏக்கராக குறைந்துள்ளது. மகாராஷ்டிராவில் நோய் தாக்குதல் காரணமாக வரத்து குறைந்துள்ளது.
கரோனா காலத்தில் கோயில்கள் திறக்கப்படவில்லை. கோயில்திருவிழாக்கள் 8 மாதமாக நடக்கவில்லை. உணவகம் உள்ளிட்ட உணவு சார்ந்த தொழில்கள் முடங்கி இருந்தன. தற்போது பொது முடக்கத்தில் இருந்து இவை விடுபட்டதால், மஞ்சளின் தேவை அதிகரித்துள்ளது. வரத்து குறைவும், உள்ளூர் தேவை அதிகரிப்பு காரணமாகவும், தற்போது குவின்டால் ரூ.8 ஆயிரத்தை கடந்துள்ளது.
இதேபோல், கடந்த ஆண்டு40 சதவீதம் மஞ்சள் ஏற்றுமதியாகியுள்ளது. கரோனா பரவலுக்குப் பிறகு, கிருமிநாசினியான மஞ்சளின் பயன்பாடு உலகம் முழுவதும் அதிகரித்து இருப்பதால், இந்த ஆண்டு ஏற்றுமதி மேலும் அதிகரிக்கும். அதேபோல், உள்ளூர் தேவையும் அதிகரிக்கும் என்பதால், இந்த ஆண்டு டிசம்பர் வரை மஞ்சளின் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.