தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த வரட்டாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட்ட உயர் கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன். 
தமிழகம்

வரட்டாறு அணையில் இருந்து பாசனத்துக்கு நீர் திறப்பு: 5108 ஏக்கர் நிலம் பயன்பெறும்

செய்திப்பிரிவு

அரூர் வட்டம் வரட்டாறு அணையில் இருந்து பாசனத்துக்காக நேற்று உயர் கல்வி மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் தண்ணீரை திறந்து வைத்தார்.

தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் வள்ளிமதுரை கிராமத்தில் வரட்டாறு அணை உள்ளது. இந்த அணை, 2001-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு 2006-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது. வரட்டாறு அணையில் 34.45 அடி உயரத்துக்கு(10.50 மீட்டர்) தண்ணீர் தேக்கி வைக்க முடியும். மழைக்காலத்தில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் அணை முழுமையாக நிரம்பியது. இந்த அணையில் இருந்து பாசனத்துக்கு நேற்று தண்ணீர் திறந்து விடப் பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். தமிழக உயர் கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று தண்ணீரை பாசனத்துக்கு திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியது:

வரட்டாறு அணையில் இருந்து 2020-21-ம் ஆண்டுக் கான சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப் பட்டுள்ளது. 25 ஏரிகள் மூலம் பாசன வசதி பெறும் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பரப்பான 2255 ஏக்கர் நிலங்களுக்கு 20 நாட்களுக்கும், நேரடி பாசனம் பெறும் புதிய ஆயக்கட்டு பரப்பு 2853 ஏக்கர் நிலங்களுக்கு 20 நாட்களுக்கும் என சுழற்சி முறையில் தண்ணீர் வழங்கப்படும். இதன்மூலம் 5108 ஏக்கர் பரப்பு நிலங்கள் பாசன வசதி பெறும்.

நாளொன்று 30 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட அரசாணை மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் மூலம் வள்ளிமதுரை, தாதரவலசை, சாமநத்தம், கீரைப்பட்டி, குடுமியாம்பட்டி, அச்சல்வாடி, புதூர், எல்லப்புடையாம்பட்டி, நாச்சினாம்பட்டி, கெளாப்பாறை, ஈட்டியம் பட்டி, மாம்பாடி, செல்லம்பட்டி, மாவேரிப்பட்டி, கம்மாளப்பட்டி ஆகிய கிராமங்கள் பாசன வசதி பெறும். விவசாயிகள் பொதுப்பணித்துறையினருடன் ஒத்துழைத்து பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக விளைச்சல் பெற்று வருமானம் ஈட்ட வேண்டும்.

இவ்வாறு பேசினார்.

இந்நிகழ்ச்சியில், பாப்பிரெட்டிப் பட்டி, அரூர் சட்டப் பேரவை உறுப்பினர்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், தருமபுரி கோட்டாட்சியர் பிரதாப், ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ஆர்த்தி, பொதுப் பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் குமார், உதவி பொறியாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT