தமிழகம்

காஞ்சிபுரம் நகராட்சியில் ரூ.42.86 கோடி வரி நிலுவை: சிறப்பு முகாம் அமைத்து வசூலிக்க முடிவு

கோ.கார்த்திக்

காஞ்சி நகராட்சியில் 51 வார்டுகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்நிலையில் நடப்பு ஆண்டில் ரூ.42.86 கோடி வரி வருவாய் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இதில், சொத்துவரி கடந்த 1989-90 ஆண்டுமுதல் நடப்பு ஆண்டு வரையில் ரூ.9.99 கோடி நிலுவையில் உள்ளது. இதில், அரசு கட்டிடங்களுக்காக பல்வேறு அரசுத் துறைகள் ரூ.1.34 கோடி நிலுவை வைத்துள்ளது. மேலும், காலிமனை வரியாக ரூ.1.96 கோடி, தொழில்வரி ரூ.2.29 கோடி, குடிநீர் வரியாக ரூ.7.40 கோடி நிலுவையில் உள்ளது. மேலும், பாதாள சாக்கடை இணைப்புக்கான கட்டணமாக ரூ.6.24 கோடி நிலுவையில் உள்ளது.

இத்தொகைகளை உடனடியாக வசூலிக்க, நகராட்சியின் உயர் அலுவலர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் நிலுவையில் உள்ள கட்டணங்களை செலுத்தாதவர்களின் பாதாள சாக்கடை இணைப்புகளை துண்டிக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டவுள்ளன. எனவே நிலுவையில் உள்ள வரித் தொகையை வசூலிக்கும் பணிகளை நகராட்சி ஆணையர் உத்தரவின்பேரில் பணியாளர்கள் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து, காஞ்சி பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி கூறியதாவது: நகராட்சியில் கடந்த 1990-ம் ஆண்டில் இருந்து பல்வேறு வரி தொகைகள் நிலுவையில் உள்ளன. அவற்றை முழுவதுமாக வசூலிக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.

நகராட்சியில் அனைத்து பிரிவுகளிலும் உள்ள பணியாளர்களை பல குழுக்களாக பிரித்து, ஒவ்வொரு வார்டுகளிலும் சிறப்பு முகாம்கள் அமைத்து வரி வசூலிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். பொதுமக்கள் நிலுவையில் உள்ள வரிகளை செலுத்தி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT