அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையத்துக்குக் கொண்டு செல்லும்போது வேளாண் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி அடையாள அட்டை கேட்பதாக விவசாயிகள் முறையிட்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் இரா.மங்கள ராமசுப்பிரமணியன், மாவட்ட வேளாண் இணை இயக்குநர் உத்தண்டராமன், கூட்டுறவுச் சங்க இணைப் பதிவாளர் திலீப்குமார், மத்திய வேளாண் கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் செந்தில்குமார், கூடுதல் எஸ்.பி. குத்தாலிங்கம், உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள், விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ராமச் சந்திரராஜா உள்ளிட்டோர் பேசுகையில், நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு செல்லும்போது வேளாண் துறை அதிகாரிகள் வாகனத்தை வழிமறித்து விவசாயி என்பதற்கான அடையாள அட்டை கேட்கிறார்கள். ஆனால், விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படவில்லை. அதோடு, ஆவணம் இல்லையெனில்வரி செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்துவதாகப் புகார் தெரிவித்தனர்.
இதற்கு வேளாண் துறை அதிகாரி கள் பேசுகையில், விவசாயிகள் கொண்டு செல்லும் நெல்லுக்கு வரி விதிக்கப்படுவதில்லை. வியா பாரிகள் கொண்டு செல்லும் நெல் லுக்கு மட்டுமே ஒரு சதவீத வரி விதிக்கப்படுகிறது என்றனர்.
அதைத் தொடர்ந்து விவசாயிகள் பேசுகையில், இருக்கன்குடி அணை உள்ளிட்ட சில இடங்களில் தூர்வாரப்படாமல் உள்ள வரத்துக் கால்வாய்களை உடனடியாகத் தூர்வார வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதற்குப் பதில் அளித்த மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் பேசுகையில், பிளவக்கல் கோவிலாறு அணையிலிருந்து பாசன வசதிபெறும் 40 கண்மாய்களுக்கும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுநிரம்பியுள்ளன. அதேபோல், பல்வேறு கண்மாய்கள், வரத்துக் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு பாசன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ள தாகத் தெரிவித்தார்.
முன்னதாக மாவட்டத்தில் சிறந்த வேளாண் சாகுபடியை மேற்கொண்டதற்காக முதல்வர் விருது பெற்ற விவசாயிகளுக்கு ஆட்சியர் இரா.கண்ணன் பாராட்டுத் தெரிவித்து நினைவுப் பரிசுகளை வழங்கினார்.