சுற்றுச்சூழல் பிரச்சினைகளை முன்னிறுத்தி செயல்பட்டு வரும் கிரீன்பீஸ் இந்தியா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பதிவை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் 4 வாரம் இடைக்கால தடை விதித்து நேற்று உத்தரவிட்டது.
கிரீன்பீஸ் இந்தியா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தமிழ்நாடு சங்கங்களின் பதிவு சட்டம் 1975-ன் கீழ் கடந்த 2002-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. சங்கங்கள் பதிவு சட்ட விதி 36, 37-ன் படி குறிப்பிட்ட காலத்துக்குள் நிதிப் பரிமாற்றம் தொடர்பான கணக்கு ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி இந்த அமைப்பு தனது கணக்கு ஆவணங்களைப் பதிவு செய்யவில்லை.
இது, சங்கங்களின் பதிவு சட்டத்துக்கு எதிரானது என்றும் விதி மீறி செயல்பட்ட உங்கள் நிறுவனத்தின் பதிவை ஏன் ரத்து செய்யக்கூடாது என்றும் சங்கங்களின் பதிவாளர் நோட்டீஸ் அனுப்பினார். அதற்கு இந்த நிறுவனம் சரிவர பதில் அளிக்கவில்லை. அதனால், கிரீன்பீஸ் இந்தியா தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட பதிவாளர் (மத்தி) சண்முகசுந்தரம் கடந்த 4-ம் தேதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து கிரீன்பீஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. அதில், “அரசு அளித்த விளக்க நோட்டீஸுக்கு உரிய பதில் அளித்தோம். ஆனால், நாங்கள் பதில் தரவே இல்லை என்று கூறி எங்கள் நிறுவனத்தின் பதிவை ரத்து செய்திருக்கிறார்கள். இது, அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது. எனவே, மாவட்ட பதிவாளர் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது.
நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் இந்த மனுவை விசாரித்து, மாவட்ட பதிவாளரின் உத்தரவுக்கு 4 வாரம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.