தமிழகம்

முதல்வர், அமைச்சர்கள் மீதான 2-ம் கட்ட ஊழல் பட்டியல்: ஆளுநரிடம் இன்று துரைமுருகன் வழங்குகிறார் 

செய்திப்பிரிவு

முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் அடங்கிய மனுவை தமிழக ஆளுநரிடம் திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து கடந்த டிசம்பர் மாதம் வழங்கினார். இந்நிலையில் இரண்டாம் கட்ட ஊழல் பட்டியலை ஆளுநரிடம் இன்று துரைமுருகன் வழங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைக் கடந்த டிசம்பர் மாதம் 22-ம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக செய்தித்தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் சந்தித்தனர். அப்போது முதல்வர் பழனிசாமி தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவை மீது 97 பக்க ஊழல் புகார்கள் அடங்கிய மனு ஆளுநரிடம் அளிக்கப்பட்டது.

அப்போது கொடுக்கப்பட்ட பட்டியலில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மின்துறை அமைச்சர் பி.தங்கமணி, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டை வைத்திருந்தனர்.

முதல் கட்டமாக முதல்வர் பழனிசாமி மீதான வருமானத்திற்கு மீறிய சொத்துக் குவிப்பு வழக்கு உள்ளிட்ட எட்டு அமைச்சர்கள் மீது ஊழல் புகார் பட்டியல் தமிழக ஆளுநரிடம் கொடுக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுத்து, மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டிட வேண்டும் என திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதேநேரம் இரண்டாவது பட்டியலும் தயாராகி வருகிறது, கூடிய விரைவில் இரண்டாவது பட்டியலும் ஆளுநரிடம் அளிக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறிவந்தார். முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் துறை வாரியாக நடக்கும் ஊழல்கள் குறித்து தகவல் திரட்டிய திமுக அதையும் இன்று ஆளுநரிடம் அளிக்க உள்ளது.

இந்த இரண்டாவது பட்டியலை இன்று மாலை 5.30 மணிக்கு திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையிலான குழு ஆளுநரிடம் வழங்குகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் வெளியூர் பிரச்சாரத்தில் இருப்பதால் துரைமுருகன் தலைமையில் ஆளுநரைச் சந்திக்கின்றனர். இதில் பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட உயர்மட்டத் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

இரண்டாம் கட்டப் பட்டியலை ஆளுநரிடம் வழங்க திமுக சார்பில் நேரம் கேட்கப்பட்ட நிலையில் இன்று மாலை 5.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் பட்டியலில் கரோனா காலத்தில் அரசின் பல்வேறு துறைகளில் நடந்த முறைகேடுகள், ஊழல்கள் பட்டியலிடப்பட்டு வழங்கப்படுவதாகவும் முதல்வர் முதல் 10 அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியல் அளிக்கப்படுவதாகவும் திமுக தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

SCROLL FOR NEXT