தமிழகம்

அமைச்சர் தங்கமணியின் குமாரபாளையம் தொகுதியில் நடக்கும் 237 பணிகளுக்கு தடை விதிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

செய்திப்பிரிவு

ஊரகப் பகுதி முன்னுரிமை திட்ட நிதியத்தின் கீழ் அமைச்சர் தங்கமணியின் குமாரபாளையம் தொகுதியில் மேற்கொள்ளப்படும் 237 பணிகளுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நாமக்கல் மாவட்டம் அனிமூர் பஞ்சாயத்து தலைவர் தாமரைச் செல்வன் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:

தமிழக ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் துறை சார்பில் ரூ.702 கோடி, ஊரகப் பகுதிகளுக்கான முன்னுரிமை திட்ட நிதியத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், நாமக்கல் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளுக்கான முன்னுரிமை திட்ட நிதியத்தில் இருந்து அமைச்சர் தங்கமணியின் தொகுதியான குமாரபாளையம் தொகுதிக்கு மட்டும் ரூ.20.61 கோடியில் பணிகளை மேற்கொள்ள டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. இது சட்டவிரோதம். இப்பணிகளை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும். இவ்வாறுஅதில் கூறப்பட்டிருந்தது.

தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ‘‘நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளில் அமைச்சர் தங்கமணியின் தொகுதி உட்பட 3 தொகுதிகளுக்கு மட்டும்நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலம்முழுவதும் அனைத்து தொகுதிகளையும் சமமாக கருத வேண்டும்’’ என்று குற்றம் சாட்டப்பட்டது.

அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, ‘‘நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6தொகுதிகளும் சமமாகவே கருதப்பட்டுள்ளது. தற்போது குமாரபாளையம் தொகுதியில் 237 பணிகளுக்கு டெண்டர் கோரப்பட்டு 25 சதவீத பணிகள் தொடங்கியுள்ளன. கடந்த 2016-17 முதல் 2019-20வரை 6 தொகுதிகளுக்கும் சம அளவிலேயே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது’’ என்று கூறி அதற்கான விவரங்களை தாக்கல் செய்தார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘குமாரபாளையம் தொகுதியில் 237 திட்டப் பணிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டதால், அதற்கு தடை விதிக்க முடியாது’’ என்று மறுப்பு தெரிவித்து, வழக்கு விசாரணையை வரும் மார்ச் 4-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இப்பணிகளுக்கான டெண்டர் கோரியது, பணிகள் வழங்கியது உள்ளிட்ட விவரங்களை தேதிவாரியாக மனுதாரர் தரப்புக்கு வழங்க, அரசு தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT