வீடு கட்டுவதற்காக வாங்கிய கடன் தொகையை திரும்பச் செலுத்துமாறு வங்கி அதிகாரிகள் நெருக்கடி கொடுத்ததால், விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
கோவை தொண்டாமுத்தூர் அருகேயுள்ள தீனம்பாளையம் சிம்சன் நகரைச் சேர்ந்தவர் ஆனந்தன் (29). இவர், அருகேயுள்ள உளியாம்பாளையத் தில் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து, விவசாயம் செய்து வந்தார். மேலும், எலெக்ட்ரீஷியன் வேலைக்கும் சென்றுவந்தார். இவருக்குத் திருமணமாகி, மனைவி கோகிலா(24) மற்றும் ஒரு வயது மகள் உள்ளனர்.
இந்நிலையில், தனியார் வங்கி யில் கடன் பெற்று, வீடு கட்டியுள்ளார் ஆனந்தன். கரோனா ஊரடங்கால் வேலைவாய்ப்பு குறைந்ததால், சரிவர வங்கித் தவணையைக் கட்ட முடியவில்லை. இதனால் வங்கி அதிகாரிகள், கடனைத் திருப்பிச் செலுத்துமாறு வற்புறுத்தியுள்ளனர்.
மேலும், வங்கித் தரப்பில் தகாத முறையில் பேசியதாகவும் கூறப்படுகிறது.
இரு தினங்களுக்கு முன் கோகிலா, குழந்தையுடன் சரவணம் பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். கடன் தவணையை திருப்பிச் செலுத்துமாறு வங்கி அதிகாரிகள் தொடர்ந்து வற்புறுத்தி வருவதால் மன உளைச்சல் அடைந்துள்ளதாகவும், இதனால் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளதாகவும் நேற்று முன்தினம் தன் சகோதரிக்கு செல்போன் மூலம் ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உளியாம்பாளை யத்தில் உள்ள தோட்டத்துக்குச் சென்று பார்த்தபோது, அங்குள்ளஅறையில் ஆனந்தன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருந்தது தெரியவந்தது. தகவலறிந்து வந்த தொண்டாமுத்தூர் போலீஸார், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத் தனர்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு ஆனந்தன் எழுதி வைத்திருந்த இரு கடிதங்களையும் போலீஸார் கைப்பற்றினர்.
அதில், ‘‘நான் வீடு கட்ட கடன் வாங்கியிருந்தேன். கரோனா ஊரடங்கால் தொழில் முடங்கியதால், கடன் தொகையை திருப்பிச் செலுத்த முடியவில்லை. இந்நிலையில், கடன் அளித்த வங்கியின் நிதிப் பிரிவினர் என்னை நேரில் சந்தித்து, தகாத வார்த்தைகளால் திட்டி, மன உளைச்சலை ஏற்படுத்தினர். எனவே, நான் தற்கொலை செய்து கொள்கிறேன். எனது வீட்டையும், அது தொடர்பான பத்திரத்தையும் பெற்று, எனது தாயிடம் ஒப்படைக்க வேண்டும்’’ என்று எழுதியிருந்தார். இது தொடர்பாக தொண்டாமுத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.