தருமபுரியில் புதிதாக தொடங்கப்பட உள்ள விவசாய, தோட்டக்கலை பட்டயப் படிப்பு கல்லூரி மூலம் விவசாயிகள், மாணவர்கள் பயன்பெறுவார்கள் என உயர்கல்வி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் பார்வையற்ற 210 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.27.29 லட்சம் மதிப்பில் தக்க செயலிகளுடன் கூடிய கைபேசிகளையும், 12 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.8.99 லட்சம் மதிப்பில் திருமண உதவித் தொகை, தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட ஆட்சியர் கார்த்திகா தலைமை வகித்தார். இதில், உயர்கல்வி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பங் கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது:
விவசாயத்தை பெரிதும் நம்பியுள்ள தருமபுரி மாவட்டத்தில் விவசாயம் மற்றும் தோட்டக்கலை பட்டயப் படிப்பு கல்லூரி நிகழாண்டில் செயல்படுத்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இதற்கு மாவட்ட மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இக்கல்லூரி தொடங்குவதன் மூலம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் மாணவர்கள் மிகுந்த பயன் பெறுவார்கள். விவசாயம் சார்ந்த கல்வி மற்றும் செயல்முறைகளால் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் பயன்பெற்று, இங்குள்ள விவசாய பணிகள் மேம்பாடு அடைய வழிவகை செய்ய வேண்டும்.
கடந்த காலங்களில் தருமபுரியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க ஒட்டுமொத்தமாக 1783 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இதில் 1233 ஏக்கர் அரசு நிலம். 550 ஏக்கர் தனியாருக்கு சொந்தமான நிலம். இதில் தனியாருக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்த கால தாமதம் ஏற்படுவதை கருத்தில் கொண்டு, தருமபுரியில் சிப்காட் முதல் கட்டம், சிப்காட் 2-ம் கட்டம் என நிறைவேற்ற அரசு முடிவு செய்துள்ளது.
தற்போது சிப்காட் முதல் கட்டத்தை 1000 ஏக்கர் அரசு நிலத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டு முதல்வர் அடிக்கல் நாட்டியுள்ளார்.
இதேபோல் புலிக்கரை ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டம், அலியாளம் அணைக் கட்டிலிருந்து தூள்செட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டம், எண்ணேகொல்புதூரில் இருந்து தும்பலஅள்ளி அணைக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டம் என 3 நீர்ப்பாசனத் திட்டங்களைச் செயல்படுத்த ரூ.320 கோடி நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இத்திட்டங்களைச் செயல்படுத்த நிலம் கையகப்படுத்த தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் பேசினார். இந்நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாப்பிரெட்டிப்பட்டி கோவிந்தசாமி, அரூர் சம்பத்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.