தமிழகம்

தேமுதிகவுக்கு தமிழகத்தில் 10 சதவீதத்துக்கு மேல் வாக்கு வங்கி உள்ளது: கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நம்பிக்கை

செய்திப்பிரிவு

அவடி மாநகர் மாவட்ட தேமுதிக சார்பில், ஆவடி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பூத் முகவர்கள், செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று ஆவடி அடுத்த பட்டாபிராமில் நடைபெற்றது.

இதில் தேமுதிக பொருளாளரும், மண்டல பொறுப்பாளருமான பிரேமலதா, தேர்தல் பணிக்குழு செயலாளர் மகாலட்சுமி, ஆவடி மாநகர மாவட்ட செயலாளர் நா.மு.சங்கர், ஆவடி மாநகர மாவட்ட தொழிற்சங்க பேரவை செயலாளர் பெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகள், பூத் முகவர்கள், செயல்வீரர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:

லஞ்ச ஊழலுக்கு அப்பாற்பட்ட நேர்மையான கட்சி தேமுதிக. மக்களுக்காக உழைப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி; எங்களை யாரும் குறைகூற முடியாது. தேமுதிகவுக்கு 2 சதவீத ஓட்டு வங்கிதான் உள்ளது என, பலர் வதந்தி பரப்பி வருகின்றனர். 234 தொகுதிகளிலும் தனியாக மக்களை சந்தித்து, களம் கண்ட கட்சி தேமுதிக. நாடாளுமன்ற தேர்தலில் 4 தொகுதிகளில் நாங்கள் போட்டியிட்டோம்; அதை வைத்து 2 சதவீதம் ஓட்டு வாங்கியதாக சிலர் கூறுகின்றனர். மற்ற தொகுதியில் போட்டியிட்ட கூட்டணி கட்சிக்காரர்களிடம் எங்கள் ஓட்டு உள்ளது என்பதை யாரும் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. ஆகவே, தேமுதிகவுக்கு தமிழகத்தில் 10 சதவீதத்துக்கு மேல் வாக்கு வங்கி உள்ளது.

தமிழகத்தில் இன்றைக்கும் வலிமை மிக்க கட்சியாகவும், எல்லோரும் திரும்பிப் பார்க்கக் கூடிய கட்சியாகவும் தேமுதிக உள்ளது. ஆகவே, வரும் சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக எந்த கூட்டணியில் இருக்குமோ? அந்த கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். 2021-ம் ஆண்டு தேமுதிகவுக்கு மிகப் பெரிய வெற்றி ஆண்டாக அமையும்

தமிழகத்தில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கையை விட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம். ஆகவே, தமிழக அரசியலை மாற்றும் சக்தியாக பெண்கள் உள்ளனர். பெண்கள் முடிவு செய்துவிட்டால், அதை யாராலும் தடுக்க முடியாது. அடுப்பாங்கரை வரை சென்று வாக்கு கேட்கும் உரிமை உடையவர்கள் பெண்கள்தான்.

இந்த வேட்பாளர் வெற்றி பெற்றால், தொகுதி முன்னேறுமா; மக்களுக்கு நன்மை கிடைக்குமா; படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்குமா என சிந்தித்து, பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும். இப்படி செய்தாலே, தமிழகத்தில் பெரிய மாற்றத்தை கொண்டு வரமுடியும்

தேர்தல் பணிகளில் பெண்கள் சரிசமமாக பங்கேற்கும் வகையில், பூத் கமிட்டிகளில் மகளிரணியினரை இடம் பெறச் செய்யவேண்டும். தேர்தல் பிரச்சாரத்துக்கு தேமுகதிக தலைவர் விஜயகாந்த் நிச்சயம் வருவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொகுதி முன்னேறுமா; மக்களுக்கு நன்மை கிடைக்குமா; படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்குமா என சிந்தித்து, வாக்களிக்க வேண்டும்.

SCROLL FOR NEXT