தமிழகம்

சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு அதிமுகவை சின்னாபின்னமாக்க முயற்சிக்கும் பாஜக: தொல்.திருமாவளவன் பேச்சு

செய்திப்பிரிவு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் `தமிழகத்தை மீட்போம்' அரசியல் எழுச்சி மாநாடு மதுரையில் நேற்று நடைபெற்றது.

இதில் பங்கேற்ற தலைவர்கள் பேசிய விவரம்:

இந்திய கம்யூ. மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு:

மதவாத சக்திகளைத் தோற் கடிக்க வேண்டும் என்பதற்காக திமுக தலைமையில் ஓரணியாகத் திரண்டிருக்கிறோம். லட்சிய தீர்மானத்தை நிறைவேற்ற அனை வரும் தொடர்ந்து போராடி வெற்றி பெற வேண்டும். அதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ:

மத்தியில் மனச்சாட்சியற்ற முறையில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் மோடி. தமிழகத்தில் ஆளும் ஊழல் அரசு, கொள்ளையடிக்கும் அரசு தூக்கியெறியப்பட வேண்டும். அதற்கு திமுக கூட்டணிக்கு மக்கள் வெற்றிபெற்றுத்தர வேண்டும்.

மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:

தமிழகத்தில் அனைத்துத் தரப்பினரும் போராடிக் கொண் டிருக்கிறார்கள். ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர் களுக்கு ஓய்வூதியம் வழங்க முடியாத நிலையிலும், வெற்றி நடை போடும் தமிழகம் என அதிமுக அரசு விளம்பரப்படுத்துகிறது. எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டி 3 ஆண்டாகியும் பணிகள் தொடங்கவில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.15 ஆயிரம் கோடி ஊழல். எனவே, அதிமுகவை ஆட்சியிலிருந்து தூக்கி எறிவோம்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:

திமுக கூட்டணியைச் சிதறடிக்க வேண்டும், இந்த கூட்டணி வலிமையோடு இயங்கக் கூடாது, வாக்குவங்கிகள் ஒன்று திரண்டு விடக்கூடாது என சனாதன கட்சிகள் பகீரத முயற்சிகளை மேற்கொள்கின்றன. அதற்காக அவதூறுகள், வதந்திகளை, கருத்து முரண்களைப் பரப்பி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் பாஜகவுக்கு வேலை இல்லை என நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியிருக்கிறது. எல்லா மாநிலங்களிலும் ஒரே கட்சி ஆள வேண்டும் என்பதும், ஒரே கட்சி, ஒரே ஆட்சி என்பதும் அவர்கள் வாதம். அதற்கு மாநிலக் கட்சிகளை வீழ்த்த வேண்டும்.

தேர்தலுக்கு முன்பு அதிமுக போன்ற ஒரு கட்சியைப் பிடித்து அவர்கள் முதுகில் சவாரி செய்வது. பின்னர் கட்சியை பிளவுபடுத்துவது அவர்களின் நோக்கம். தேர்தலுக்கு பின்பு வெற்றி பெற்ற கட்சிகளின் உறுப்பினர்களை பிடித்து விலகச் செய்து ஆட்சியை பிடிக்க முயற்சிப்பது பாஜகவின் திட்டம். மேற்கு வங்கத்தில் அநாகரிக அரசியலை அரங்கேற்றியுள்ளனர். புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்கியிருக்கிறார்கள். அதனை தமிழ்நாட்டில் செய்ய திட்ட மிட்டிருக்கிறார்கள்.

அதிமுகவை தேர்தலுக்கு பின்னால் சின்னாபின்னமாக்க நினைக்கிறது பாஜக. திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க முயற்சிப்பார்கள். திமுக கூட்டணி வெற்றி பெறும். ஆட்சியை கைப்பற்றும், என்றார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:

ஆங்கிலேயர்கள் ஆண்டபோது இருந்த இக்கட்டான காலகட்டம்போல் பாஜக ஆட்சியின் காலகட்டம் உள்ளது. பாஜக வின் வளர்ச்சியை தடுக்க வேண்டும். பாஜகவுக்கு துணைபோகும் தமிழக ஆட்சியாளர்களை வரும் தேர்தலில் விரட்டியடிப்போம் என்றார்.

மாநாட்டில், விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும். கல்விக் கடன்களை ரத்து செய்ய வேண்டும். எழுவர் விடுதலையில் விரைந்து முடிவெடுக்க வேண்டும் உள்ளிட்ட 22 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

SCROLL FOR NEXT