இபிஎஸ், ஓபிஎஸ் கைகளைப் பிடித்து ஊழலுக்கு உடந்தை என்பதை மோடி ஒப்புக்கொண்டிருக்கிறார் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில மாநாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
மாநாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
வாய்ப்பை ஏற்படுத்திய மாநாட்டுக் குழுவுக்கும் நன்றி.
திமுக மாநாட்டில் கலந்து கொள்வதுபோல் இந்த மாநாட்டில் பங்கேற்க வந்திருக்கிறேன். உங்களில் ஒருவனாக நினைத்து அழைத்துள்ளீர்கள், மீண்டும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
சோவியத்தில் ஸ்டாலின் இல்லாமல் கம்யூனிஸ்ட் தத்துவம் இருக்கமுடியாதோ அதேபோல் இந்த ஸ்டாலின் இல்லாமல் மாநாடு நடக்காது. நாம் ஒரே கொள்கை குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
நானும் அந்த உணர்வோடுதான் நின்று கொண்டிருக்கிறேன். 2 இயக்கங்களும் தோன்றிய காலத்திலிருந்து நெருக்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
தத்துவத்தின் அடிப்படையில் நெருக்கமான இயக்கம் கம்யூனிஸ்ட் இயக்கம். திமுக பாட்டாளி மக்கள் பயன்பெறும் ஆட்சியாக இருந்தது. முதலில் ஆட்சிக்கு வந்தபோது ஏழைக்குலத்தில் உதித்த தலைவன் ஒருவர் ஆட்சிக்கட்டிலில் ஏறுகிறான் என கருணாநிதி எழுதினார். ஏழைகள் சிரிக்கும் ஆட்சியாக இருந்தது.
திராவிட இயக்க கொள்கைளோடு, கம்யூனிஸ்ட் இயக்கங்களின் லட்சியங்களையும் நிறைவேற்றினார் கருணாநிதி. அதேபோல், அமையவுள்ள கழக அரசும் நல்லாட்சி தரும். அதற்று கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் மட்டுமல்ல. கொள்கை மாற்றத்திற்கான தேர்தல், கொள்ளைக்கூட்டத்திடமிருந்த ஆட்சியை பறிக்க வேண்டும். கொத்தடிமைகளிடமிருந்த ஆட்சியை பறிக்க வேண்டும்.
லட்சியவாதிகளிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும். தத்துவுத்தின் அடிப்படையில், கொள்கையின் அடிப்படையில் சேர்ந்திருக்கிறோம். எதிரணி ஒருத்தரை ஒருத்தர் காப்பாற்றிகொள்ள கூட்டணி. அதிமுக பாஜக கூட்டணி சுயநலக்கூட்டணி.
கடந்த 14ம் தேதி நடந்த அரசுவிழாவில், பிரதமர், பன்னீர்செல்வம், எடப்பாடியின் கைகளை பிடித்து பிரதமர் மோடி உயர்த்திக்காட்டினார். ஆனால் அவர்களது கைகள் ஊழல் கறைபடிந்த கைகள் என்பதை மறக்க வேண்டாம். இந்த ஊழல் கைளை பிடித்து நானும் ஊழலுக்கு உடந்தை என்பதை மோடி ஒப்புக்கொண்டிருக்கிறார்.
பிரதமர் மோடியின் ஒரு கை காவிக்கை, மற்றொரு கை கார்ப்பரேட் கை. இந்த கைகள் தமிழகத்தில் ஊழல் கைகளோடு சேர்ந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் பாரதியார், ஒளவையார் பாடலை சொன்னால் போதும் நினைக்கிறார். விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் பிரதமர் மோடி ஒளவையார் பாடலை சொல்லலமா. மீனவர்களின் உரிமையை பாதுகாக்கும் என பிரதமர் சொல்கிறார்.
ஆனால், ஜனவரி.21ம்தேதி இலங்கையால் தமிழக மீனவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
தேர்தல் பிரச்சாரத்திற்கு 2014ல் ராமநாதபுரம் வந்த மோடி, தமிழக மீனவர்களுக்கு இலங்கையால் பிரச்சினை, குஜராத் மீனவர்களுக்கு பாகிஸ்தானால் பிரச்சினை, இதனை ஆட்சிக்கு வந்தவுடன் தீர்ப்பேன் என்று சொன்னார், ஆனால் பிரச்சினை தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
மோடி ஆட்சி, சொந்த மக்கள் மீது பொருளாதார தாக்குதல் நடத்தி வருகிறது.. பெட்ரோல், டீசல்,காஸ் விலை உயர்வு தொடர்ந்து கொடுக்கும் பரிசாக இருக்கிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கும் வேளையில் தொடர்ந்து ஏற்றி வருகின்றனர். சொந்த நாட்டு மக்கள் மீது தொடர்ந்து பொருளாதார தாக்குதல் நடத்தி வருகிறார் மோடி.
முதுகெலும்பில்லாத ஆட்சியாக அடிமை ஆட்சி இருக்கிறது. தட்டிக்கேட்க தைரியமில்லாத ஆட்சியாக எடப்பாடி ஆட்சி உள்ளது. விவசாயம், மின்சாரம் போன்றவற்றில் .மாநில உரிமைகளை அடிமை அதிமுக அரசு தாரை வார்த்துள்ளனர். தமிழகத்தின் நிதித்தேவைகள் பூர்த்தி செய்வதில்லை. புதிய திட்டங்களுக்கு நிதி இல்லை.
மதுரை எய்ம்ஸ்க்கு மோடி நினைத்தால் நிதி ஒதுக்கமுடியும். . மோடி தமிழகத்தில் பழனிசாமி அரசாங்கத்தை ஒரு அரசாங்கமாக கருதவில்லை. நிகழ்காலத்திற்கு மட்டுமல்ல எதிர்காலத்திற்கு முக்கியமான தேர்தல். அதிமுகவை பயமுறுத்தி தமிழகத்தில் காலூன்ற நினைக்கிறது.
அதன் மூலம் தமிழகத்தில் பாஜக பலப்படுத்த நினைக்கிறது. பாசிச பாஜகவிற்கும், அதிமுகவிற்கும் வரும் தேர்தலில் பாடம் புகட்டும் தேர்தல் வேண்டும். உன்னதமான தலைவர்களால் .உரம்போடப்பட்ட தமிழகத்தை, பாசிச பாஜக –அதிமுகவிடமிருந்து தமிழகத்தை மீட்போம் என உங்களை கேட்டுக்கொள்கிறேன்.