தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணியைத் தோற்கடிக்க வேண்டும் என மதுரை மாநாட்டில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்தார்.
டி.ராஜா பேசியதாவது: இந்திய வரலாற்றில் இன்று முக்கியமான நாளாகும்.
தமிழ்நாட்டில் சமூக நீதிக்காகவும், அரசியல் நீதிக்காகவும், பொருளாதார நீதிக்காகவும், பெரியாரோடு கைகோர்த்து சமூக நீதிக்காக போராடிய சிங்காரவேலர் பிறந்த நாளாகும். அந்நாளில் இந்த எழுச்சி மாநாடு நடைபெறுகிறது.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மாநகரம் மதுரை. மத்தியிலும், மாநிலத்திலும் அரசியல் பிழைகளை செய்து கொண்டிருப்பவர்களை எச்சரிக்கவும், அவர்களை வீழ்த்தவும் இந்த மாநாட்டை நடத்தி கொண்டிருக்கிறோம்.
மத்தியில் மோடி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. மத்தியில் ஆளும் பாஜக கட்சி ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் கருவி. நாம் புரிந்துகொண்டால் போதாது. மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியுள்ளது.
இந்தியாவின் அரசியல் சட்டத்தை இன்றைக்கு நாசப்படுத்துவதாகும்.
இந்திய நாட்டை அரசியல் சட்டம் இலக்கணப்படுத்துகிறது. இந்திய நாடு மதச்சார்பற்ற நாடாகும். மக்கள் நல அரசாக இருக்க வேண்டும் என அரசியலமைப்பு சட்டம் சொல்கிறது. மக்களின் நலன்தான் அந்த அரசுக்கு அடிப்படை நோக்கமாகும். ஆனால் அதனை மீறி பாஜக செயல்படுகிறது. பாஜக அரசு நாட்டில் மதச்சார்பின்மையை குழிதோண்டி புதைக்கிறது.
நாட்டின் செல்வங்கள் உற்பத்தி சாதனங்கள் அனைத்தும் மக்களின் கையில் இருக்க வேண்டும். தனியார் ஒருசிலரின் கையில் குவிந்துவிடக்கூடாது. மோடி பிரதமராக பின்னால் இந்தியாவின் செல்வ வளங்கள் உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் சில தனியார் துறையைச் சேர்ந்த கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையடிப்பதற்கு சட்டங்கள் இயற்றப்படுகின்றன.
குறிப்பாக பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படுகின்றன. எந்த பிரதமரும் பேசாத ஒன்றை மோடி பேசுகிறார். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதாக பேசுகிறார். வங்கிகள், சுரங்கத்தொழில்கள் போன்றவை தனியார் மயமாகின்றன. பொதுத்துறை நிறுவனங்கள், பாதுகாப்புத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படுகின்றன.
அந்த கார்ப்பரேட் முதலாளிகளை நாம் பாதுகாக்க வேண்டும் என பிரதமர் பேசுகிறார். இந்தியாவின் பொருட்களை செல்வங்களை, உற்பத்தி செய்பவர்கள் தொழிலாளர்கள் தான் ,விவசாயிகள் தான். அம்பானிகளோ, அதானிகளோ, டாட்டாக்களோ அல்ல.
மோடி அரசு மக்களுடைய அரசாக இல்லை. பெருமுதலாளிகளின் அரசாக செயல்பட்டு வருகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களின் அரசாக இருந்து வருகிறது. அதனால்தான் இந்தியா முழுவதும் விவசாயிகள் போராட்டம் வீறுகொண்டு நடைபெறுகிறது. மோடி அரசாங்கம் மக்களைப்பற்றி கவலைப்படுவதாக இல்லை.
மோடியின் கண்ணோட்டத்தில் செல்வங்களை உற்பத்தி செய்பவர்கள் உழைக்கும் மக்களல்ல. நீங்கள் காரல்மார்க்ஸ் படிக்க வேண்டும். பொருளாதாரத்தின் தந்தை ஆடம்ஸ்வித் எழுத்தி வெல்த்ஆப்நேஷன் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா.
உழைக்கும் மக்களை கொள்ளையடிக்கும் அரசு இந்தியாவிற்கு தேவைதானா? ஒருபக்கத்தில் மதவெறி பிடித்த பாசிச ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் எனவும், மற்றொரு பக்கம் இந்தியாவின் செல்வங்களை எல்லாம் பெருமுதாளிகளுக்கு கொடுக்க வேண்டும் எனவும் மோடி செயல்படுகிறார்.
இதைத்தான் நாங்கள் அரசியல் பிழைகள் என்று சொல்கிறோம். மோடி கொஞ்சமாவது தனது கொள்கையை மாற்றிக்கொள்வார் என நினைப்பது தவறு. அந்த மோடியை நாம் மாற்றியாக வேண்டும். அவரது ஆட்சியை தூக்கியெறிய வேண்டும். அப்போதுதான் இந்தியாவை காப்பாற்ற முடியும்.
மோடியின் தலைமையில் செயல்படும் அரசு மாநிலத்தின் எல்லா அதிகாரங்களையும் உரிமைகளை பறித்துக்கொள்கிறது. தமிழகத்தை ஆளும் அரசு மத்திய அரசின் எடுபிடி அரசாக உள்ளது. இந்தியை முதன்மைப்படுத்தவும், கல்வியை வணிகமயமாக்கவும், காவி மயமாக்கவும் பாஜக அரசு செயல்படுகிறது.
இட ஒதுக்கீடு கொள்கைக்கு தாக்குதல் வந்தபோது, எடப்பாடி அரசு எப்போதாவது எதிர்ப்பு தெரிவித்ததுண்டா?. அதிமுக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்ததுண்டா, நீங்கள் கேட்க வேண்டும். அதிமுகவின், தமிழகத்தின் நிலை என்ன. அதிமுக அரசியல் பிழைகள் செய்து வருகின்றனர்.
இவர்களை சரித்திரம் மன்னிக்காது. இவர்களுக்கு தண்டனை அளிக்க வேண்டும். அதற்கான அறநெறி தீர்ப்பு தமிழகத்தில் உருவாக வேண்டும். நடைபெறும் தேர்தலில் திமுக தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பற்ற முற்போக்க அணி வெற்றி பெற வேண்டும். ஆட்சி மாற்றம் வரவேண்டும்.
தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கெல்லாம் மோடி மீண்டும் மீண்டும் ஓடுகிறார். வாழ்க்கை என்பது போராட்டமாக மாறியிருக்கிறது. வாழ்வதற்காக போராட வேண்டியிருக்கிறது. போராடுவதற்காக வாழ்
அம்பானிக்கும், அதானிகளுக்கும் அடிமை ஜீவிகளாக நீங்கள் இருக்கிறீர்களே மோடி. மோடியின் தொடக்கம் வீழ்ச்சியின் தொடக்கம். இந்தியாவை காப்பாற்ற, தமிழர்களின் நலன் காக்க ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும்.
நல்ல தீர்ப்பை தமிழக மக்கள் கொடுத்திருக்கிறார்கள் என வரலாறு சொல்ல வேண்டும். பாஜக, அதிமுக கூட்டணிக்கு பாடம் புகட்டும் வகையில், திமுக கூட்டணிக்கு வெற்றியைத் தேடித்தர வேண்டும். இது தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவின் எதிர்காலத்திற்கும் இதுதான் நல்லது.
தமிழக மக்களுக்கு முதிர்ந்த அரசியல் அனுபவம் இருக்கிறது. தமிழக மக்கள் பாஜகவை முறியடித்து காட்டுவார்கள். இது பெரியார் மண்.
திருக்குறள், ஒளவையார் மேற்கோள் காட்டலாம். அவரது கருத்துக்களை புரிந்து கொண்டதுண்டா, அதன்படி வாழ்வதுண்டா, அதன்படி ஆட்சி நடக்கிறதா.
மக்களை ஏமாற்றுகிற, மோசடி செய்கிற ஆட்சியை நடத்துகிறார் மோடி. மோடி ஆட்சியில் இந்தியாவில் ஜனநாயகம் நீடிக்குமா என்ற சந்தேகம் எழுகிறது. அரசாங்கத்தை கேள்வி கேட்டால் கொள்கையை விமர்சனம் செய்தால் தேச விரோதம் என பாஜக அரசு சொல்கிறது.
ஜனநாயகத்தை எதிர்ப்பை வெளிப்படுத்துவது ஜனநாயகத்தின் உள்ளார்ந்த தன்மை. மோடி அரசாங்கம் ஜனநாயகத்தை நாசப்படுத்துகிறது. நடைபெறவுள்ள தேர்தலில் பாஜக அதிமுகவை தோற்கடிக்க வேண்டும்.
முறியடிக்க வேண்டும். திமுக கூட்டணி வெற்றி அனைவரும் பாடுபட வேண்டும்.