புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை உத்தரவுப்படி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பாகவே முதல்வர் நாராயணசாமி முக்கிய முடிவு எடுக்க உள்ளார்.
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்குப் பெரும்பான்மை இல்லாத சூழல் உள்ளது. சட்டப்பேரவையில் வரும் 22-ம் தேதி மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிப்பது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தத் துணைநிலை ஆளுநர் மாளிகை உத்தரவிட்ட சூழலில் முதல்வர் நாராயணசாமி காந்தி வீதியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோயிலில் இன்று மாலை வழிபட்டார்.
அதையடுத்து இவ்விவகாரம் தொடர்பாக முதல்வர் நாராயணசாமியிடம் கேட்டதற்கு, "சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தை இன்று இரவு கூட்ட உள்ளோம். கூட்டணிக்கட்சித் தலைவர்களிடமும் இதுகுறித்து ஆலோசனை நடத்தப்படும். அதன் முடிவில்தான் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி தெரிவிக்க முடியும்" என்று குறிப்பிட்டார்.
பெரும்பான்மையில் வெல்லாவிட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு, "ஊகத்தின் அடிப்படையிலான கேள்விக்கு எந்தப் பதிலும் சொல்ல இயலாது" என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி முக்கியத் தலைவர்களிடம் இதுதொடர்பாக முதல்வர் நாராயணசாமி பேசியுள்ளார். அவர்கள் தரப்பில் விசாரித்தபோது, "சட்டப்பேரவைக்குச் சென்று நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்பதற்கு முன்பாகவே முக்கிய முடிவை முதல்வர் எடுக்க உள்ளார்" என்று சூசகமாகக் குறிப்பிட்டனர்.