தமிழகம்

கரூர் தோரணக்கல்பட்டியில் பேருந்து நிலையம் அமைப்பதற்கு எதிரான வழக்கு: தற்போதைய நிலை தொடர உயர் நீதிமன்றம் உத்தரவு

கி.மகாராஜன்

கரூர் தோரணக்கல்பட்டியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரூர் மாவட்டம் பசுபதிபாளையத்தைச் சேர்ந்த பெரியசாமி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

கரூர் நகராட்சி முத்துகுமாரசுவாமி பேருந்து நிலையத்தில் நெருக்கடி ஏற்பட்டதால், நகருக்கு வெளியே கருப்பம்பாளையத்தில் வெளியூர் பேருந்து நிலையம் கட்ட முடிவானது.

இந்த பேருந்து நிலையம் 2 ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தோரணக்கல்பட்டியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இங்கு பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாக கட்டிடம் அமைக்க டெண்டர் அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

உயர் நீதிமன்றம் உத்தரவை மதிக்காமல் தோரணக்கல்பட்டியில் பேருந்து நிலையம் கட்ட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இங்கு பேருந்து நிலையம் கட்டுவதால் பொதுமக்களுக்கு பலன் ஏற்படாது. எனவே, தோரணக்கல்பட்டியில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான அரசாணை மற்றும் டெண்டர் அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர் விசாரித்து, தோரணக்கல்பட்டியில் பேருந்து நிலையம் கட்டுமானப் பணிக்கான டெண்டர் நடவடிக்கைகளை தொடரலாம்.

தோரணக்கல்பட்டியில் பேருந்து நிலையம் அமைக்கும் விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர வேண்டும் என்று கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT