தமிழகம்

சிட்கோ நகருக்கு சிறப்பு கவனம்: நிவாரணப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

செய்திப்பிரிவு

கன மழையால் பாதிக்கப்பட்ட வில்லிவாக்கம் சிட்கோ நகரில் இன்னும் வெள்ளம் வடியாத நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் அப்பகுதிக்கு சிறப்பு கவனம் செலுத்தி நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னையில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் தேங்கிய மழைநீர் வடிந்துள்ள நிலையில், வில்லிவாக்கம் சிட்கோ நகரில் இன்னும் முழுவதுமாக வடியவில்லை. “கொரட்டூர் ஏரியிலிருந்து தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் உபரி நீரால் அப்பகுதியில் வெள்ளம் இன்னும் வடியவில்லை” என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் சிட்கோ நகர் பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் அவதிக்குள்ளாகியுள்ளன.

அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதை தொடர்ந்து, அங்கு தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றுவது, அங்குள்ள மக்களை மீட்பது மற்றும் அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவது போன்றவற்றில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.

தினந்தோறும் அப்பகுதியில் மழைநீர் வெளியேற்றப்படுவது, உணவுப் பொட்டலங்கள் வழங்குவது, சென்னை குடிநீர் வாரியம் மூலமாக குடிநீர் விநியோகிப்பது, போக்குவரத்து துறை சார்பில் குடிநீர் பாட்டில்கள் வழங்குவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் நேற்று ஆய்வு செய்தார். அங்கு துப்புரவுப் பணிகளை விரைவுபடுத்த கூடுதலாக 300 பணியாளர்களை நியமித்தார். அங்கு செயல்பட்டு வரும் மருத்துவ முகாம்களை பார்வையிட்டார். பின்னர் மழைநீர் வெளியேற்றப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அத னைத் தொடர்ந்து சிட்கோ நகர் மேல்நிலைப் பள்ளியில் இருந்து மழைநீர் வெளியேற்றப்படுவதையும் பார்வையிட்டார்.

SCROLL FOR NEXT