நடிகர் விஷால் நடித்த 'சக்ரா' திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீக்கியது. இதனால் நாளை திட்டமிட்டபடி 'சக்ரா' படம் வெளியாகிறது.
நடிகர் விஷால் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகி நாளை வெளியாக உள்ள திரைப்படம் 'சக்ரா'. இப்படத்திற்குத் தடை விதிக்கக் கோரி டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் என்ற மற்றொரு தயாரிப்பாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
'சக்ரா' படத்தின் கதையை இயக்குநர் ஆனந்தன் ஏற்கெனவே தன்னிடம் தெரிவித்து, படத்தைத் தயாரிக்க ஒப்பந்தம் போட்டுவிட்டு, தற்போது ஒப்பந்தத்தை மீறி விஷால் தயாரிப்பில் படம் உருவாக்கியது காப்புரிமைச் சட்டத்திற்கு எதிரானது என்றும் மனுவில் ரவீந்திரன் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு பிப்ரவரி 16-ல் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தங்களிடம் காப்புரிமை உள்ளதால் 'சக்ரா' படத்தை வெளியிடுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என டிரைடண்ட் ஆர்ட்ஸ் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி, 'சக்ரா' திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது 'சக்ரா' படத்தின் கதை தொடர்பாக இயக்குநர் ஆனந்தன் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்துக்கு இடையே போடப்பட்ட ஒப்பந்தத்துக்குத் தங்கள் நிறுவனம் பொறுப்பேற்க முடியாது என விஷால் தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும், ஆனந்தன் தெரிவித்த கதையை டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்காத நிலையில், படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்காவிட்டால் தங்கள் நிறுவனத்துக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திடம் இயக்குநர் ஆனந்தன் போட்ட ஒப்பந்தத்தை அறிந்தே உள்நோக்கத்துடன் விஷால் படத்தைத் தயாரித்தாரா என்பது மேற்கொண்ட விசாரணையில்தான் உறுதி செய்ய முடியும் எனத் தெரிவித்தார்.
மேலும், 'சக்ரா' திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீட்டிக்கப்பட்டால் தயாரிப்பு நிறுவனம் மட்டுமல்லாமல், தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் எனப் பலரும் பாதிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்து படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கி நீதிபதி உத்தரவிட்டார்.
படம் வெளியாகும் பிப்ரவரி 19 முதல் மார்ச் 5 வரையிலான வசூல் குறித்து மார்ச் 10-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் விஷால் பட நிறுவனத்துக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.