தமிழகம்

தென்மாவட்டங்களில் ராகுல் காந்தி பிப். 27 முதல் மூன்று நாள் சுற்றுப்பயணம்: கே.எஸ்.அழகிரி முக்கிய ஆலோசனை

ரெ.ஜாய்சன்

தென்மாவட்டங்களில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் 27-ம் தேதி முதல் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகள் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தூத்துக்குடியில் நாளை (பிப்.19) ஆலோசனை நடத்துகிறார்.

தமிழக சட்டப்பேரவைக்கு வரும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் பிரசாரங்களை ஏற்கனவே தொடங்கியுள்ளனர். தமிழக முதல்வர் கே.பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இதேபோல் பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, அக்கட்சியின் தலைவர் நட்டா உள்ளிட்டோர் தமிழகத்தில் அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதேபோன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தமிழகத்தில் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அவர் கடந்த மாதம் 23-ம் தேதி முதல் 3 நாட்கள் மேற்கு மாவட்டங்களான கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். தொடர்ந்து நேற்று புதுச்சேரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இந்நிலையில் தமிழகத்தில் 2-ம் கட்ட சுற்றுப்பயணத்தை ராகுல் காந்தி வரும் 27-ம் தேதி தொடங்குகிறது. தொடர்ந்து மூன்று நாட்கள் விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 5 தென் மாவட்டங்களில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அவர் 28-ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ராகுல் காந்தி சுற்றுப்பயணத்துக்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடியில் நாளை (பிப்.19) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இது தொடர்பாக தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ்.முரளிதரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

ராகுல் காந்தியின் தென்மாவட்ட சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக நடத்துவது குறித்த ஆலோசனை தூத்துக்குடி- எட்டயபுரம் சாலையில் உள்ள சிட்டி டவர் அரங்கத்தில் நாளை (பிப்.19) மாலை மணிக்கு நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, சட்டப்பேரவை கொறடா ராமசாமி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சஞ்சய்தத், ஸ்ரீவல்ல பிரசாத், தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT