தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் 12 படுக்கைகள் கொண்ட தனி வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தீக்காயம் மற்றும் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சைத் துறை தலைவர் டாக்டர் நிர்மலா பொன்னம்பலம், பேராசிரியர் டாக்டர் ஏஞ்சலின் செல்வராஜ் ஆகியோர் செய்தியா ளர்களுக்கு நேற்று அளித்த பேட்டி:
தீபாவளி பண்டிகையை விபத்து இல்லாமல் அனைவரும் சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாட வேண்டும். தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும்போது ஏற்படும் தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிப் பதற்காக மருத்துவமனையில் 12 படுக்கைகள் கொண்ட சிறப்பு தனி வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தீக்காயத்துக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான களிம்புகள், துணிகள், மாத்திரை, மருந்துகள் தயார் நிலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
தீபாவளி முடிந்த பிறகும், ஒரு வாரத்துக்கு சிறப்பு வார்டு செயல்படும். இந்த வார்டில் 24 மணி நேரமும் சிகிச்சை அளிப்பதற்காக 4 டாக்டர்கள், 4 செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் கொண்ட சிறப்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையின்போது தீக்காயப்படுவது குறைந்து கொண்டே வருகிறது. பொதுமக்க ளிடம் போதிய விழிப்புணர்வு ஏற் பட்டுள்ளதே இதற்குக் காரணம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
பாதுகாப்பு நடவடிக்கைகள்
பட்டாசுகளை திறந்த வெளியில் வெடிக்க வேண்டும். பெரியவர் களின் மேற்பார்வையில்தான் சிறுவர்கள் பட்டாசு வெடிக்க வேண்டும். அருகில் பக்கெட்டில் தண்ணீர் மற்றும் முதலுதவி பெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். தூரமாக இருந்துகொண்டு நீண்ட குச்சிகளை பயன்படுத்தி பட்டாசு வெடிக்க வேண்டும். அப்போது இறுக்கமான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். தீக்காயங்கள் ஏற்பட்டால், காயத்தின் மீது தண் ணீர் ஊற்ற வேண்டும். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
செய்யக்கூடாதவை
சிறிய மற்றும் நெருக்கடியான இடங்களில் பட்டாசு வெடிக்கக் கூடாது. சட்டை, பேண்ட் பாக்கெட்டுகளில் பட்டாசுகளை கொண்டு செல்லக்கூடாது. மெழுகுவர்த்தி, விளக்குகளை அருகில் வைக்கக் கூடாது.
பட்டாசு வெடிக்கும்போது முகத்தை அருகில் கொண்டு செல்லக்கூடாது. பட்டுப் புடவை மற்றும் லூசான ஆடைகளை அணியக் கூடாது. கைகளால் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. தீக்காயத்தின் மீது மை, மணல், மஞ்சள் பொடி, காபி தூள் போன்றவற்றை போடக் கூடாது. முகத்தில் தீக்காயம் ஏற்பட்டால் கண்களை கைகளால் கசக்கக் கூடாது.