கரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து தமிழகத்தில் மார்ச் 16 பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன. அதன்பின் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கடந்த மாதம் முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டன. பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வரை வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இருப்பினும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஆனாலும், தனியார் பள்ளிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுவதாகக் கூறினாலும், அவை மாணவர்களுக்குப் புரிதலை அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
சில மாதங்களுக்கு முன்புவரை அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் குடும்பச் சூழ்நிலை கருதி, தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டிருந்தது. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டதால் அவர்கள் மீண்டும் பள்ளிக்குத் திரும்பியுள்ளனர்.
அதேநேரத்தில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் திறக்கப்படாதபோதும், மாணவர்களுக்கு சத்துணவுத் தொகுப்பு அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், மாணவர்களில் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், பள்ளிகள் திறக்கப்படாததால், கடைகளிலும், பேருந்து நிலையங்களிலும் யாசகம் எடுக்கும் நிலைக்கு மாறியுள்ளனர். பண்ருட்டி, வடலூர், நெய்வேலி, விருத்தாசலம், வேப்பூர், திட்டக்குடி பகுதிகளில் தொடக்கப் பள்ளி மாணவர்கள் கடை கடையாக ஏறி யாசகம் கேட்கும் காட்சியைக் காண முடிந்தது.
இதையடுத்து யாசகத்தில் ஈடுபட்டிருக்கும் மாணவர்களிடம் பேச்சுக் கொடுத்தபோது, ” பெற்றோர் திருஷ்டி பொம்மை விற்பனை செய்து வருவதாகவும், வீட்டில் சும்மாதானே இருக்கிறாய் என்று கூறி அனுப்பி வைக்கின்றனர். இதன் மூலம் நாளொன்றுக்கு ரூ.200 வரை கிடைக்கும். அதைக்கொண்டு பெற்றோரிடம் அளிப்போம். யாசகமாகக் கிடைத்த காசைக் கொடுக்கவிட்டால் அதட்டுவார்கள்” என்றனர்.
பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் மாணவர்களின் திறனிலும் பாதிப்பு ஏற்படுவதோடு, மாணவர்கள் புதிதாகக் கற்க வேண்டியதைக் கற்க முடியாமல் போகிறது எனவும், ஏற்கனவே கற்றதில் சிலவற்றை மறக்கவும் வாய்ப்புள்ளது என உலக வங்கி எச்சரித்துள்ளது.
இதுகுறித்து கல்விச் செயற்பாட்டாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் கேட்டபோது, ''பள்ளிக்கூடம் என்பது எழுத்தறிவு, எண்ணறிவுடன் நிற்கக் கூடியதல்ல. அரசுப் பள்ளிகளைத் திறந்தபோதிலும் மாணவர்கள் வராததால், அதற்கான காரணத்தை அறிந்து மதிய உணவு அளித்து வரவழைத்தது. உடுத்த உடை பற்றாக்குறை இருப்பதை அறிந்து சீருடை வழங்கியது. இதுபோன்ற அடிப்படைப் பிரச்சினைகளை ஆராய்ந்து ஒவ்வொன்றாக ஆராய்ந்து அதை வழங்கி மாணவர்களைப் பள்ளிக்கு வரவழைத்தனர் சிறந்த ஆட்சியாளர்கள்.
ஆனால், தற்போது கடந்த 10 மாதங்களாக பள்ளிகள் பூட்டிக் கிடக்கின்றன. அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அரசு இதுவரை ஆராய்ந்து பார்க்கவில்லை. கரோனா பரவலைக் காரணம் காட்டி பள்ளியைத் தொடர்ந்து மூடி வைத்திருக்கிறார்கள்.
ஆனால், பண்டிகைக் காலங்களில் பேருந்துகளிலும், ரயில்களிலும் மக்கள் குடும்பம் குடும்பமாகக் குழந்தைகளுடன் முண்டியடித்துக் கொண்டு நெருக்கடியில் பயணம் மேற்கொண்டனர்.
தற்போது கிராமத்திற்கு கிராமம் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் தொடக்கப்பள்ளிகள் உள்ளன. தென்காசி, மதுரை சுற்றுவட்டார கிராமங்களில் கரோனா தொற்றே இல்லாத நிலையும் உள்ளது. அங்கெல்லாம் பள்ளிகள் திறப்பதில் அரசுக்கு என்ன கஷ்டம்?
கரோனா பொது முடக்கத்தால் பல குடும்பங்கள் மிகவும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் சென்றுள்ளதால், வீட்டிலிருக்கும் பிள்ளைகளை வேலைக்கு அனுப்பும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது. பள்ளி செல்லக் கூடிய பிள்ளைகளும் வீட்டுச் சுமைகளைச் சுமக்கின்றனர். இது ஆரோக்கியமான சூழல் இல்லை.
எனவே பொது சுகாதாரத்துறை இயக்கத்தின் ஆலோசனையைப் பெற்று, தொடக்கப் பள்ளிகளைத் திறக்க அரசு உடனடியாக முன்வரவேண்டும். பதற்றமில்லாமல் பள்ளியைத் திறந்து நடத்த ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கி, ஒவ்வொரு பள்ளியையும் அந்தந்தப் பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்களோடு இணைத்து, விரைவு தொலைபேசி (HOT LINE) இணைப்பு வழங்கி, பள்ளிகளில் மாணவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு போன்று கண்டறியப்பட்டால் உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையத்திற்குத் தகவலளித்து பாதிப்பைச் சரிசெய்யவேண்டும். 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் தொடங்கியபோது, சத்து மாத்திரைகள் வழங்கியதைப் போன்று இவர்களுக்கும் வழங்கிடவேண்டும்” என்றார்.
இது தொடர்பாக கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலாவைத் தொடர்பு கொண்டபோது, அவர் பேச முன்வரவில்லை. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமூரியிடம் கேட்டபோது, இதுபற்றி தற்போதுதான் தெரியவந்துள்ளது. ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.