தமிழகம்

மதுரை என்பது இந்தியாவில் இருக்கிறதா? ஜப்பானில் இருக்கிறதா?- ஸ்டாலின் கேள்வி 

செய்திப்பிரிவு

தமிழ்நாட்டில் பாஜகவோ அதன் கூட்டணியோ ஜெயிக்கப் போவதில்லை. பிறகு எதற்காக பணம் ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் நினைக்கிறாரா? ஜப்பான் நாட்டில் இருந்து நிதி வரும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் கூறியுள்ளார். அப்படியானால் ஜப்பானில் இருந்து நிதி வரும் வரை இந்த திட்டம் கிடப்பில் போடப்படுமா? என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

மதுரை யானைமலை, ஒத்தக்கடை பகுதியில் நேற்று நடைபெற்ற, மதுரை மாவட்டக் கழகங்களுக்குட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:

“மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டிடத்துக்கு 2007இல் நான்தான் அடிக்கல் நாட்டி வைத்தேன். மதுரையை வளப்படுத்திய அரசுதான் கழக அரசு. கலைஞரின் அரசு. அடுத்து அமைய இருக்கும் ஆட்சியில் இதுபோல ஏராளமான திட்டங்களைக் கொண்டு வர இருக்கும் அரசுதான் திமுக அரசு.

இப்படி எதையாவது சொல்ல முடியுமா அதிமுகவால்? எய்ம்ஸ் மருத்துவமனையையாவது கொண்டு வந்துவிடுவார்கள் என்று நினைத்தேன். அதிலும் ஏமாற்றம்தான் கிடைத்தது. 2015ஆம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அறிவிப்பை நாடாளுமன்றத்தில் பாஜக அரசு செய்தது. அதன்பிறகு எதுவும் நடக்கவில்லை.

2018 ஜூன் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்பிறகு எதுவும் நடக்கவில்லை. 2019 ஜனவரி நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்துக்காக மதுரை வந்தார் பிரதமர். அடிக்கல் நாட்டினார். இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. எதுவும் நடக்கவில்லை.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் அரசிதழில் ஒரு அறிவிக்கை வெளியிட்டுள்ளார்கள். அதன்பிறகும் அதற்கான எந்த ஏற்பாடும் இல்லை. 12 கோடி ஒதுக்கி இருக்கிறார்கள். இது தொடர்பாக நமது நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவுக்கு மத்திய அமைச்சர் தந்திருக்கிற பதிலில், ஆந்திராவுக்கு ரூ.782 கோடி, மகாராஷ்டிராவுக்கு ரூ.932 கோடி, மேற்கு வங்கத்துக்கு ரூ.882 கோடி, உத்தரப் பிரதேசத்துக்கு ரூ.702 கோடி, பஞ்சாப்புக்கு ரூ.597 கோடி, அசாமுக்கு ரூ.341 கோடி, இமாச்சலப் பிரதேசத்துக்கு ரூ.750 கோடி ஒதுக்கி இருக்கும் மத்திய அரசாங்கம் தமிழகத்துக்கு மொத்தமே ரூ.12 கோடிதான் ஒதுக்கி இருக்கிறது என்றால் என்ன அர்த்தம்?

தமிழ்நாட்டில் பாஜகவோ அதன் கூட்டணியோ ஜெயிக்கப் போவதில்லை. பிறகு எதற்காக பணம் ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் நினைக்கிறாரா? ஜப்பான் நாட்டில் இருந்து நிதி வரும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் கூறியுள்ளார். அப்படியானால் ஜப்பானில் இருந்து நிதி வரும் வரை இந்த திட்டம் கிடப்பில் போடப்படுமா? என்று நம்முடைய டி.ஆர்.பாலு திருப்பிக் கேட்டுள்ளார்.

இந்தக் கூட்டத்தின் வாயிலாக நான் கேட்கும் கேள்வி, மதுரை என்பது இந்தியாவில் இருக்கிறதா? ஜப்பானில் இருக்கிறதா? ஜப்பான் நாடு நிதி தர மறுத்தாலோ, தாமதம் செய்தாலோ மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வராதா?

ஒரே ஒரு திட்டத்தை அறிவித்துவிட்டு அந்த திட்டத்தையும் ஏழு ஆண்டுகளாக பாஜக பம்மாத்து காட்டிக் கொண்டு இருக்கிறது என்பதுதான் வேதனைக்குரியது”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT