ராமநாதபுரம் - தூத்துக்குடி இடையே அமைக்கப்பட்ட இயற்கை எரிவாயு குழாய், சென்னை மணலியில் சிபிசிஎல் நிறுவனம் அமைத்துள்ள பெட்ரோல் கந்தகம் அகற்றும் பிரிவு ஆகியவற்றை டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி கலந்து கொண்டார். இதில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, சிப்காட் மேலாண்மை இயக்குநர் ஜெ.குமரகுருபரன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், ஐஓசிஎல் செயல் இயக்குநர் டி.எஸ்.நானாவேர், பொது மேலாளர் கவுதமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
தமிழகம்

தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளில் எண்ணெய், இயற்கை எரிவாயு துறையில் ரூ.50 ஆயிரம் கோடி திட்டங்களுக்கு அனுமதி: புதிய திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி தகவல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில்கடந்த 6 ஆண்டுகளில் ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறை திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில், மணலியில் ரூ.500 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு உள்ள பெட்ரோல் கந்தகம் அகற்றும் பிரிவு, ரூ.700 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு உள்ள ராமநாதபுரம்-தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய் பாதைஆகியவற்றை நாட்டுக்கு அர்ப்பணித்தல் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம், பனங்குடியில் ரூ.31,500 கோடி மதிப்பில் நிறுவப்பட உள்ள காவிரிப்படுகை சுத்திகரிப்பு ஆலையின் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.

பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம், இத்திட்டங்களை தொடங்கி வைத்து பேசியதாவது:

விவசாயிகள் மற்றும் நுகர்வோருக்கு உதவும் வகையில் எத்தனால் பயன்பாட்டில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. சூரியசக்தி மின் உற்பத்தித் துறையில் முதன்மை நிலையை எட்டும் வகையில், சூரிய மின்சாரத்தை பயன்படுத்துவதை அதிகரிக்கும் வழிமுறைகளில் கவனம் செலுத்தப்படுகிறது.

‘ ஒரே நாடு, ஒரே எரிவாயு தொகுப்பு' திட்டத்தின்கீழ், 5 ஆண்டுகாலத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு கட்டமைப்புத் திட்டங்களுக்கு ரூ.7.5 லட்சம் கோடி செலவிட திட்டமிடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் 95 சதவீதசமையல் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பாஹல் திட்டத்தில் இணைந்து உள்ளனர். உஜ்வாலா யோஜ்னா மூலமாக, தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் 32 லட்சம் குடும்பங்களுக்கு புதிய இணைப்புகள் தரப்பட்டு உள்ளன. பிரதமரின் கரீப் கல்யாண் யோஜ்னாமூலம் 31.6 லட்சம் குடும்பங்களுக்கு இலவசமாக மாற்று எரிவாயு உருளைகள் வழங்கப்பட்டு உள்ளன.

ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி வரையில் 143 கிலோமீட்டர் நீளத்துக்கான இயற்கை எரிவாயு குழாய் திட்டம் தொடங்கப்படுவதால், ஓஎன்ஜிசி எரிவாயு உற்பத்தி வளாகங்களில் கிடைக்கும் எரிவாயுவுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் ரூ.5 ஆயிரம் கோடி செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உரம் தயாரிப்பதற்காக, குறைந்த விலையில் ஸ்பிக் நிறுவனத்துக்கு இதன் மூலம் எரிவாயு கிடைக்கும். இதன் மூலம் வருடம் தோறும் உற்பத்திச் செலவில் ரூ.70 கோடி முதல் ரூ.95 கோடி வரையில் மிச்சமாகும். இதனால் உரத்தின் உற்பத்தி விலை குறையும்.

நாகப்பட்டினத்தில் அமையும் சிபிசிஎல்-ன் புதிய சுத்திகரிப்பு வளாகத்தில் சுமார் 80 சதவீதம் அளவுக்கு உள்நாட்டு பொருட்கள் மற்றும் சேவைகள் பயன்படுத்தப்படும். வரும் 2030 -ம்ஆண்டுக்குள், இந்தியாவின் எரிசக்தி தேவைகளில் 40 சதவீதம்அளவுக்கு, பசுமை வழி ஆதாரங்களில் இருந்து தயாரிக்கும் எரிசக்தியாக இருக்கும்.

கடந்த 6 ஆண்டுகளில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறைகளில் ரூ.50 ஆயிரம் கோடி அளவுக்கான திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. 2014-ம் ஆண்டுக்கு முன் ஒப்புதல் அளிக்கப்பட்டவற்றில், ரூ.9,100 கோடி அளவுக்கான திட்டங்கள் முடிக்கப்பட்டு உள்ளன. மேலும், ரூ.4,300 கோடி அளவிலான திட்டங்கள் வர உள்ளன. இவ்வறு மோடி கூறினார்.

விழாவில் பேசிய தமிழக முதல்வர் பழனிசாமி, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம், நாகப்பட்டினத்தில் அமைக்க உள்ள சுத்திகரிப்பு நிலையம் மூலம், தொழில் துறையில் பின்தங்கி உள்ள அப்பகுதி வளர்ச்சி அடையும்.

ராமநாதபுரம், தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய் பாதை திட்டத்தின் மூலம், அப்பகுதியில் தொழில் வளர்ச்சி ஏற்படுவதோடு, உரத் தொழிற்சாலை உள்ளிட்டவை பயன் அடையும். மூன்று திட்டங்களையும் செயல்படுத்த தமிழக அரசு போதிய ஒத்துழைப்பு அளிக்கும் என்றார்.

இந்நிகழ்ச்சியில், மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழக ஆளுநர்பன்வாரிலால் புரோஹித், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT