மேகாலய முன்னாள் ஆளுநர் வி.சண்முகநாதனின் 'இந்த மண்ணில் விளைந்த மகத்தான சிந்தனை' என்ற நூல் வெளியீட்டு விழா கோவையில் நேற்று நடைபெற்றது. நூலை வெளியிட்டு ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தலைவர் மோகன் பகவத் பேசியதாவது:
வாழ்க்கைக்குத் தேவையான பல விஷயங்கள் இந்த நூலில் உள்ளன. இவை, இருளில் உள்ளவர்களுக்கு வெளிச்சமாக இருக்கும். பலரும் பயன்பெறும் வகையில் இந்த நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும். ராமாயணம் தொடங்கி, திருக்குறள் உள்ளிட்ட நீதி நூல்கள் வரை அனைத்து நூல்களும், நாம் அனைவரும் ஒன்று என்பதையே சுட்டிக்காட்டுகின்றன. அதை அனைவரும் உணர வேண்டும்.
அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் ராமர் கோயில் கட்டுவதற்காக அதிக வரவேற்பு கிடைத்துவருகிறது. அரசியல் காரணங்களுக்காக எதிர்ப்பவர்கள்கூட ராமர் கோயில் கட்ட உதவி வருகின்றனர். ஏனெனில், ராமர் அனைவரது இதயங்களிலும் இருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ்.தென்பாரத தலைவர் வன்னியராஜன், தென் தமிழக முன்னாள் தலைவர் ஆர்.வி.எஸ். மாரிமுத்து, ஆர்.வி.எஸ். அறக்கட்டளைத் தலைவர் கே.வி.குப்புசாமி, விஜயா பதிப்பகம் மு.வேலாயுதம், மனுநீதி அறக்கட்டளைத் தலைவர் மாணிக்கம் அத்தப்ப கவுண்டர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.