தமிழகம்

கோவை செல்வசிந்தாமணி குளம் முதல் சிவாலயா சந்திப்பு வரையில் 10 ஆண்டுகளாக தாமதமாகும் 4 வழிச்சாலை பணி: விரைவில் பணிகள் தொடங்கும் என நெடுஞ்சாலைத் துறையினர் தகவல்

டி.ஜி.ரகுபதி

கோவை மாநகரில் இருந்து பேரூர், ஆலாந்துறை, கோவைக் குற்றாலம், சிறுவாணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு செல்வதற்கு முக்கிய வழித்தடமாக பேரூர் சாலை உள்ளது.

இந்தச் சாலையில் செல்வபுரம்செல்வசிந்தாமணி குளக்கரை பேருந்து நிறுத்தத்தில் இருந்துசிவாலயா சந்திப்பு வரையுள்ள600 மீட்டர் தூரம் மிகவும் குறுகலாக உள்ளது. இரு வழிப்பாதையான இந்த சாலையின் அகலம் 5 மீட்டர் முதல் 10 மீட்டர் வரை வெவ்வேறு அளவுகளில் உள்ளது. இதனால் அடிக்கடி வாகனநெரிசல் ஏற்படுகிறது.

இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறும்போது, ‘‘இந்த வழித்தடத்தில் அதிகளவில் பேருந்துகள் இயங்குகின்றன.

குறுகலான பகுதியில் இரண்டு பேருந்துகள் எதிரெதிரே வந்தால், அவை செல்வதற்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவிடும். அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. இச்சாலை 4 வழிப் பாதையாக அகலப்படுத்தப்படும் என கடந்த 2011-ம் ஆண்டு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. ஆனால்,10 ஆண்டுகளுக்கு மேலாகியும் அகலப்படுத்தும் பணி முழுமையாக முடியவில்லை. இதனால் மேற்கண்ட 600 மீட்டர் தூரத்தில் தினமும் போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது. சாலை விரிவாக்கப் பணியை விரைவில் முடிக்க வேண்டும்’’ என்றனர்.

திட்ட வடிவம் தயாரிப்பு

இதுதொடர்பாக மாநில நெடுஞ்சாலைத் துறையின் மாவட்ட உயர் அதிகாரி கூறும்போது,‘‘600 மீட்டர் தூரத்துக்கு சாலையை அகலப்படுத்த தேவையான நிலத்தை கையகப்படுத்த, நிலத்தின் உரிமையாளர்களுடன் 10 சுற்றுக்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. நிலம் கையகப்படுத்துதலில் ஏற்பட்ட தாமதத்தால் விரிவாக்கப்பணி தாமதமானது. பல சுற்று பேச்சுவார்த்தையின் இறுதியில்3 மாதங்களுக்கு முன்னர்தான், 40-க்கும் மேற்பட்ட உரிமையாளர்களிடமிருந்து 1,310 சதுர மீட்டர் இடம் கையகப்படுத்தப்பட்டு, கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளன.

ரூ.1 கோடி மதிப்பில் மொத்தம் 20 மீட்டர் அகலத்தில் 4 வழிப் பாதையாக இந்த 600 மீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்கப்பட உள்ளது.சமீபத்தில் அரசு வெளியிட்ட ஆணையைத் தொடர்ந்து, இதற்கான திட்ட வடிவம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அரசிடம் ஒப்புதல் பெற்று, டெண்டர் மூலம் தகுந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, விரைவில் விரிவாக்கப் பணிகள் தொடங்கும்’’ என்றனர்.

SCROLL FOR NEXT