கடலூரில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் எம்.சி.சம்பத் பெண் பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கினார். அருகில் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி. 
தமிழகம்

திருமண நிதி உதவி திட்டத்தில் 1,754 பெண்களுக்கு 14 கிலோ தங்கம் வழங்கல்

செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டத்தில் 1,754 பெண் களுக்கு திருமண நிதியுதவியாக ரூ.7 கோடியே 19 லட்சத்து 25 ஆயிரம் மற்றும் தலா 8 கிராம் தாலிக்கு தங்கம் நேற்று வழங்கப்பட்டது.

கடலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று ஏழை பெண்களுக்கு திருமண நிதியுதவி வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கினார். தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத், கடலூர், அண்ணாகிராமம், பண்ருட்டி,குறிஞ்சிப்பாடி ஒன்றியங்களை சேர்ந்த 1,754 பெண் பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியாக மொத்தம் ரூ. 7 கோடியே 19 லட்சத்து 25 ஆயிரம் வழங்கினார். மேலும் தாலிக்கு தலா 8 கிராம் வீதம் மொத்தம் 14.032 கிலோ தங்கமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியது:

தமிழக முதல்வரின் திருமண நிதி உதவித்திட்டத்தின் மூலம் கடலூர் மாவட்டத்தில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் இதுவரை 46,659 பெண்களுக்கு திருமண நிதியுதவியும், தாலிக்கு தங்கமும் வழங்கப்பட்டுள்ளது. பெண்களின் முன்னேற்றத்திற்கு அரசு உறுதுணையாக இருக்கும் வகையில் மகளிர் குழுக்கள் மூலம் சுய தொழில் செய்வதற்கு நிதியுதவி, மகப்பேறு நிதியுதவி, மானிய விலையில் இருசக்கர வாகனம் உள்ளிட்ட பல திட்டங் களை செயல்படுத்தி வருகிறது என்று தெரிவித்தார்.

சமூக நல அலுவலர் அன்பழகி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர்திருமாறன், வருவாய் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT