தமிழகம்

என்.எஸ்.சி. போஸ் சாலையில் குறிப்பிட்ட காலத்துக்குள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்: உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி தகவல்

செய்திப்பிரிவு

என்.எஸ்.சி போஸ் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறிப்பிட்ட காலத்துக்குள் அகற்றப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை பாரிமுனை என்எஸ்.சி. போஸ் சாலையை ஆக்கிரமித்து நடைபாதை வியாபாரிகள் கடை அமைத்திருப்பதால் போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. இந்த ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், “ஆக்கிரமிப்புகளை அகற்றி என்.எஸ்.சி. போஸ் சாலையை நடை பாதை கடைகள் இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும். ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரி கள் ஈடுபடும்போது, காவல்துறையின் பாதுகாப்பை அவர்கள் பெற்றுக் கொள்ள லாம். இந்த உத்தரவை நிறைவேற்றி யதற்கான அறிக்கையை நவம்பர் 27-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்” என்று அக்டோபர் 13-ம் தேதி உத்தரவிட்டது.

அதன்படி, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் கொண்ட முதல்அமர்வு முன்பு இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, என்.எஸ்.சி. போஸ் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் குறித்து சென்னை மாநகராட்சி 5-வது மண்டல அதிகாரி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், “சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உதவிப் பொறியாளர் தலைமையில் 30 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

அக்குழு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மேற்கொண்டது. போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் தலைமையிலான அதிகாரிகள் பாதுகாப்பு அளித்தனர். மொத்தம் 6 நாட்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. ஏற்கெனவே ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு 1995-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, 794 பேருக்கு ஈவினிங் பஜார், ரேஷர் பிரிட்ஜ் ரோடு, பிராட்வே பஸ் ஸ்டாண்டு, ரத்தன் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் மாற்று இடம் வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT