தமிழகம்

சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூரில் அதிமுக போட்டியா?

இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூரில் அதிமுக போட்டியிட உள்ளதாகவும், உத்தேச வேட்பாளர் பட்டியலும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை (தனி) ஆகிய 4 தொகுதிகள் உள்ளன.

கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக பிற கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் தனித்து நின்றது. இதனால் 4 தொகுதிகளிலும் அதிமுக போட்டியிட்டது. இதில் சிவகங்கை, மானாமதுரையைக் கைப்பற்றியது. காரைக்குடியில் காங்., திருப்பத்தூரில் திமுக வென்றன.

இந்தத் தேர்தலில் அதிமுக பாஜக, பாமக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிடுகிறது. இந்நிலையில் அதிமுக 171 இடங்கள், பாமக 21, பாஜக 20, தேமுதிக 14, தமாகா 5, இதர கூட்டணி கட்சிகள் 3 இடங்களில் போட்டியிட உள்ளதாகவும், அதிமுகவின் உத்தேச பட்டியல் விவரமும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அதன்படி அதிமுக சார்பில் சிவகங்கை தொகுதியில் அமைச்சர் ஜி.பாஸ்கரன், திருப்பத்தூரில் செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ், காரைக்குடியில் மாவட்டச் செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதன் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால் தொடர்ந்து 4 முறை அதிமுக வெற்றி பெற்ற மானாமதுரை தொகுதி இடம்பெறவில்லை.

அந்த தொகுதி கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இதனால் மானாமதுரை தொகுதி அதிமுக நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT