தமிழகத்தில் மதுரை உள்பட 10 மாநகராட்சிகளில் நடக்கும் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டப்பணிகளில் அமைச்சர்களும், அதிகாரிகளும் ஸ்மார்ட்டாக ஊழல் செய்கிறார்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் இன்று மதுரையில் நடந்த கூட்டத்தில் குற்றம்சாட்டி பேசினார்.
மதுரை ஒத்தக்கடையில் திமுக சார்பில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி இன்று மாலை நடந்தது. மாவட்டச் செயலாளர்கள் பி.மூர்த்தி எம்எல்ஏ (வடக்கு), எம்.மணிமாறன் (தெற்கு) தலைமை வகித்தனர்.
மாவட்டப் பொறுப்பாளர்கள் கோ.தளபதி, பொன்.முத்துராமலிங்கம் மற்றும் எம்எல்ஏ-க்கள், தலைமை கழக நிர்வாகிகள், தென் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது;
மதுரையில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நான் மிகுந்த உணர்ச்சிவசப்பட்ட நிலையில் உள்ளேன். பெருமைப்படுகிறேன். அதற்கு கருணாநிதி சிலையை திறந்து வைத்ததுதான் காரணம்.
நமக்கு ஊக்கமாக, உயிராக இருந்தவர் இன்று சிலையாக கருணாநிதி இருக்கிறார். அவர் இன்னமும் நமக்கு வழிகாட்டுகிறார்.
தமிழ் சமுதாயத்தையே வாழ வைத்துக் கொண்டு இருக்கிறார். அவருக்கு பிடித்த மதுரை மண்ணில் அவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. மதுரைக்கு திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மதுரை நகராட்சியை மாநகராட்சியாக மாற்றியது, உயர்நீதிமன்றம் கிளை அமைக்க அடித்தளமிட்டவர் கருணாநிதி. அதுபோல், மதுரையில் ஏராளமான மேம்பாலங்கள், வைகை ஆறு மேம்பாலங்கள், தமிழ் அறிஞர்களுக்கு மணிமண்டபங்கள், மாட்டுத்தாவணி பஸ்நிலையம், மதுரை சென்டரல் காய்கறி மார்க்கெட், மதுரை காவேரி, மதுரை விமான நிலையத்தை ரூ.120 கோடி ஒதுக்கி சர்வதேச நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுத்தது மற்றும் வைகை, காவேரி கூட்டுக்கடிநீர் திட்டங்கள் போன்றவை திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டவை. இதுபோல ஏராளமான திட்டங்கள் திமுக ஆட்சியில் இன்னும் மதுரைக்கு வர காத்திருக்கிறது.
இதுபோல் அதிமுகவினர் எதுவும் மதுரைக்கு செய்ததாக சொல்ல முடியுமா. 2014ம் ஆண்டு மத்திய பாஜக அரசு தமிழகத்திற்கான ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அறிவித்தது. பிரதமர் மதுரைக்கே நேரடியாக வந்து அடிக்கல் நாட்டினார். அரசிதழலிலும் வெளியிட்டார்கள்.
ஆனால், இதுவரை ஒன்றும் நடக்கவில்லை. ஆந்திரா, மகாராஷ்டிரா, பஞ்சாப், அஸ்ஸாம், இமாச்சலபிரதேஷ், போன்ற நாட்டின் பிற எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு மத்திய அரசே நேரடியாக பல நூறு கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
ஆனால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வெறும் ரூ.12 கோடி மட்டுமே நிதி ஒதுக்கியுள்ளது. கேட்டால் ஜப்பான் நாட்டு நிறுவனம் நிதி ஒதுக்கியதும் மதுரையில் பணிகள் நடக்கும் என்கிறார்கள்.
மதுரை இந்தியாவில் இருக்கிறதா? ஜப்பானில் இருக்கிறதா?. பாஜக ஆட்சியில் ஒரே ஓரு திட்டத்தை தமிழகத்திற்கு அறிவித்துக் விட்டு அதையும்நிறைவேற்றால் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள். ஜப்பான் நிதி வழங்காவிட்டால் மதுரையில் எய்ம்ஸ் வராதா?.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஏராளமான முறைகேடுகள் நடக்கிறது. மதுரை அமைச்சர்களும், அதிகாரிகளும் இந்த திட்டத்தை மொத்தமாக கபளீகரம் செய்துள்ளார்கள்.
ரூ.1000 கோடி இந்த திட்டத்தில் மதுரைக்கு ஒதுக்கியுள்ளார். இந்த நிதியை முறையாக பயன்படுத்தாமல் எதை செய்தால் கமிஷன் கிடைக்குமோ எதை செய்துள்ளார்கள்.
மதுரையில் போக்குவரத்து நெரிசல் முககிய பிரச்சினையாக உள்ளது. அந்தப் பகுதிகளில் மேம்பாலங்கள் அமைத்தால் நிலம் கையகப்படுத்துவதில் பிரச்சினை ஏற்படும், இதனால் திட்டம் தாமதமாகும் என்பதால் கமிஷன் எடுக்க முடியாது என்பதால் தேவையில்லாத இடங்களில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டங்களை நிறைவேற்றுகின்றனர். மதுரையில் பல்பு மாற்றுவதில் கூட ரூ.21 கோடி முறைகேடு நடந்துள்ளது.
தமிழகத்தில் 10 மாநகராட்சியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் நடக்கிறது. எந்த ஊரிலும் ‘ஸ்மார்ட் சிட்டி’ ஆலோசனைக்குழு கூட்டம் கூட்டப்படவில்லை. குறிப்பிட்ட கால அளவில் இந்த கூட்டம் நடத்தப்பட வேண்டும். ஆனால், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் ஸ்மார்ட்டாக ஊழல் செய்கிறார்கள். மதுரையை சிட்னியாகவும், சிங்கபூராகவும் உள்ளூர் அமைச்சர்கள் மாற்றுவதாகக் கூறினர்.
ஆனால், தேர்தலுக்கு பிறகு மதுரை அமைச்சர்கள் தலைமறைவாவதுதான் நடக்கும். மதுரை மட்டுமில்லாது தமிழகத்தை மாற்றுவதற்கான கூட்டம்தான் இது. சட்டவிரோதச் செயல்கள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படும். நிச்சியம் தமிழகத்தில் திமுக ஆட்சி அமையும். அப்போது உங்கள் குறைகளும், ஆதங்கங்கமும் தீரும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.