படம் | எம்.சாம்ராஜ். 
தமிழகம்

வேலை இல்லை; பல்கலைக்கழகத்தில் இட ஒதுக்கீடு இல்லை: ராகுல் முன்னிலையில் புதுச்சேரி அரசு மீது குற்றம் சாட்டிய மீனவர்கள்

செ. ஞானபிரகாஷ்

படித்தாலும் வேலை இல்லை, தூண்டில் முள் வளைவில்லை, பல்கலைக்கழகத்தில் இட ஒதுக்கீடு இல்லாததால் படிக்க முடியவில்லை என்று புதுச்சேரி அரசு மீதும், முதல்வர் மீதும் ராகுல் காந்தி முன்னிலையில் மீனவர்கள் குற்றம் சாட்டினர்.

காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி புதுச்சேரிக்கு இன்று வந்தார். தொடர்ந்து சோலை நகர் தென்னந்தோப்பில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் மீனவர்களுடன் உரையாடினார்.

கலந்துரையாடலில் முதலாவதாகப் பேசிய பெண், ''சோலை நகரில் தூண்டில் முள்வளைவு அமைத்தால்தான் மீனவர் பிரச்சினை தீரும், தூண்டில் முள்வளைவு எப்போது அமைக்கப்படும்?'' என்று கேள்வி எழுப்பினார். அதற்கு முதல்வர் நாராயணசாமி, ''தூண்டில் முள்வளைவுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது'' என்று தவறுதலாகக் குறிப்பிட்டார். அது தவறு என்றும், தூண்டில் முள்வளைவுக்குத் தடை எதுவுமில்லை என்றும் அங்கிருந்த மீனவர்கள் விளக்கினர்.

அதைத் தொடர்ந்து மீனவர்கள் சிலர், ''படித்தாலும் வேலை கிடைப்பதில்லை. எங்களுக்கு வேலை தேவை'' என்று குறிப்பிட்டனர். ''புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மீனவர்களுக்கான இட ஒதுக்கீடு இல்லாததால் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை'' என்று பெண்கள் சிலர் குற்றம் சாட்டினர்.

''புயலின்போது நேரில் வந்து நீங்கள் பார்க்கவில்லை'' என்று மூதாட்டி ஒருவர் முதல்வரை நேரடியாகக் குற்றம் சாட்டினார். அதைக் கேட்ட ராகுல், முதல்வரிடம் அந்த மூதாட்டி என்ன சொல்கிறார் எனக் கேட்டார். அதற்கு, ''நான் நேரில் வந்து பார்த்தேன். அதைத்தான் அந்த மூதாட்டி சொல்கிறார்'' என்று முதல்வர் நாராயணசாமி குறிப்பிட்டார்.

சிறிது நேரத்துக்குப் பிறகு மீனவர்கள் பலரும் தமிழிலும், ஆங்கிலத்திலும் தங்கள் பிரச்சினைகளைத் தெரிவிக்கத் தொடங்கினர். கரோனா காலத்துக்குப் பிறகு தங்கள் வாழ்வு சீராகவில்லை என்றும் மீனவர்கள் குறிப்பிட்டனர்.

இதைத் தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, ''நான் பேச வரவில்லை. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதைக் கேட்கவே வந்துள்ளேன். உங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க மீண்டும் நான் வருவேன்'' என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT