கொடைக்கானலில் நேரடி பூண்டு கொள்முதல் நிலையம் அமைக்கக்கோரிய வழக்கில் திண்டுக்கல் ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொடைக்கானலை சேர்ந்த மனோஜ் இம்மானுவேல், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
கொடைக்கானலில் பூண்டி, மன்னவனூர் உள்ளிட்ட 20 கிராமங்களில் சுமார் நூறு ஏக்கர் பரப்பளவில் மலைப்பூண்டு பயிரிடப்பட்டுள்ளது. ஆனால், கொடைக்கானலில் பூண்டு நேரடி கொள்முதல் நிலையம் இல்லாததால், மலைப்பூண்டு வடுகபட்டி சந்தைக்கு கொண்டு செல்லப்பட்டு விற்கப்படுகிறது.
கொடைக்கானலில் பூண்டை பாதுகாப்பாக வைப்பதற்கு வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் மலைப்பூண்டு சேதமடைகிறது.
கொடைக்கானலில் நேரடி பூண்டு கொள்முதல் நிலையம் அமைத்தால் மற்ற மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் கொடைக்கானலுக்கு வந்து பூண்டு வாங்கிச் செல்வார்கள்.
பூண்டு விவசாயிகளுக்கு வடுகபட்டி சந்தைக்கு செல்வதற்கான அலைச்சல், செலவு மிச்சமாகும். எனவே, கொடைக்கானலில் பூண்டு நேரடி கொள்முதல் நிலையம் மற்றும் பூண்டு பாதுகாப்பு கிடங்கு அமைக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்து, மனு தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், கொடைக்கானல் நகராட்சி ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.