தமிழகம்

கடலூரில் என்கவுன்ட்டர்: இளைஞரை தலை துண்டித்து கொலை செய்த கும்பலைச் சேர்ந்தவர் சுட்டுக் கொலை

ந.முருகவேல்

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த புதுப்பேட்டையில் கிருஷ்ணா(30) என்ற ரவுடியை புதுப்பேட்டை போலீஸார் இன்று அதிகாலை சுட்டுக் கொன்றனர்

கடலூர் பூந்தோட்டத்தைச் சேர்ந்த ரவுடி வீரா என்ற வீராங்கன் (35). இவர் மீது ஏற்கெனவே 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் நேற்று இரவு திருப்பாதிரிப்புலியூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் தலைத் துண்டித்துக் கொலை செய்யப்பட்டுக் கிடந்துள்ளார்.

இதையடுத்து திருப்பாதிரிப்புலியூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

இதில், வீராவுக்கும், கிருஷ்ணா என்ற ரவுடிக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்த நிலையில், கொலை நிகழ்ந்திருக்கக் கூடும் எனக் கருதினர்.

இந்நிலையில், போலீஸார் நேற்று இரவே வீரா கொலை வழக்கில் தொடர்புடைய குப்பம் காலனியைச் சேர்ந்த முருகன் மகன் கிருஷ்ணா(30), அருள்பாண்டியன், சுதாகர், சாமிநாதன், ஸ்டீபன், ஜீவா, விக்ரமன், ராஜூ, ராமன் மற்றும் ராஜசேகர் ஆகியோரை பிடிக்கச் சென்றபோது, சுதாகர், ராமன், ராஜசேகர் ஆகியோர் மட்டும் பிடிபட்ட நிலையில், அவர்களைக் கைது செய்தனர்.

கிருஷ்ணா (இடது), வீரா (வலது)

பின்னர் தப்பியோடிய மற்றவர்களைப் பிடிக்க வாகனத் தணிக்கை மேற்கொள்ள மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அபிநவ், உத்தரவிட்டதன் பேரில், பண்ருட்டி அருகே பைக்கில் சென்ற கிருஷ்ணாவை, வாகனத் தணிக்கையில் இருந்த புதுப்பேட்டைக் காவல் உதவி ஆய்வாளர் தீபன், மடக்கிப் பிடித்துக் காவல் நிலையம் அழைத்து வந்துள்ளார்.

பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு கொலை செய்யப் பயன்படுத்திய ஆயுதங்களை எடுத்துவரச் சென்றபோது, பண்ருட்டியை அடுத்த குடுமியான்குப்பம் அருகே எஸ்.ஐ., தீபனை தாக்கிவிட்டு கிருஷ்ணா தப்பியோட முயன்றுள்ளார். இதையடுத்து எஸ்.ஐ., தீபன் 3 முறை துப்பாக்கியால் சுட்டதில் கிருஷ்ணா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ரவுடி கிருஷ்ணா தாக்கப்பட்டதில் காயமடைந்த தீபன் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

SCROLL FOR NEXT