தமிழகம்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி நீக்கம்: தமிழிசை சவுந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு

செய்திப்பிரிவு

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி நீக்கப்பட்டார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்தார்.

கிரண் பேடிக்குப் பதிலாக தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநராகக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், கிரண் பேடி மாற்றப்பட்டதற்கு புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி வரவேற்றுள்ளார்.

கிரண் பேடி - நாராயணசாமி மோதல் பின்னணி:

கடந்த 2016ல் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கிரண் பேடி நியமிக்கப்பட்டார். அப்போது தொடங்கியே, புதுச்சேரியில் யாருக்கு அதிகாரம் என்ற சர்ச்சை துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் இடையில் நீடித்து வந்தது.
ஆளும் கட்சிக்கு எதிராக துணைநிலை ஆளுநர் செயல்படுவதாகக் கூறி ஆட்சியாளர்கள் பல்வேறு காலகட்டங்களில் எதிர்ப்பும், போராட்டமும் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், புதுச்சேரியில் சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களான ஏழை மக்களுக்கு அரிசி, பருப்பு தரப்படுவதுபோல், மஞ்சள் அட்டைதாரர்களுக்கும் (வருமான வரிசெலுத்துவோர், அரசு ஊழியர்கள் தவிர்த்து) அரிசி, பருப்பு தருவதை ஆளுநர் கிரண்பேடி தடுத்து நிறுத்த வேலை செய்வதாக நாராயண சாமி முன்வைத்த புகார் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா வரை எட்டியது. கிரண் பேடி போட்டி அரசு நடத்துவதாக ஆளும் கட்சியினர் குமுறல்களை வெளிப்படுத்தினர்.

மேலும், கிரண் பேடியைத் திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய அரசின் கவனம் ஈர்க்க தொடர் போராட்டத்தை நாராயணசாமி தலைமையில் ஆதரவாளர்கள் முன்னெடுத்தனர்.

இந்நிலையில், கிரண் பேடியை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியிலிருந்து நீக்குவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்.

மேலும், அவருக்குப் பதிலாக தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரி துணை நிலை ஆளுநராகக் கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்றும் அறிவித்துள்ளார்.

கிரண்பேடி நீக்கம் புதுச்சேரி மக்களுக்குக் கிடைத்த வெற்றி எனக் கூறி வரவேற்றுள்ளார் முதல்வர் நாராயணசாமி.

SCROLL FOR NEXT