தமிழகம்

வெளிப்படைத்தன்மை உள்ளவர்களுடன் கை கோர்ப்போம்: புதிய தமிழகம் கிருஷ்ணசாமி உறுதி

அ.அருள்தாசன்

தமிழக அரசியலில் நேர்மை இல்லை. உண்மையாக இல்லாதவர்களிடம் கைகோர்த்து எந்த பலனும் இல்லை. வெளிப்படைத் தன்மை உள்ளவர்களிடம் மட்டுமே கைகோர்ப்போம் என்று கடையநல்லூர் அருகே நடைபெற்ற தமிழக வளர்ச்சி அரசியல் மாநாட்டில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள குமந்தாபுரத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பில் தமிழக வளர்ச்சி அரசியல் மாநாடு நடைபெற்றது.

மாநாட்டில் கிருஷ்ணசாமி பேசியதாவது:

தமிழகத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 7 உட்பிரிவுகளின் பெயர்களை மாற்றி ஒன்றாக்கி தேவேந்திர குல வேளாளர் என்று பெயர் மாற்றுவதற்கு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாங்கள் கேட்பது பெயர் மாற்றம் இல்லை. 7 பிரிவினரையும் எஸ்.சி. பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். பெயரை மட்டும் மாற்றிக கொடுத்துவிட்டு தேவேந்திரகுல வேளாளர் மக்களின் வாக்கை பெறலாம் என்றால் அது நடக்காது.

இதற்காக பல ஆண்டுகளாக போராடிக் கொண்டிருக்கும் சமுதாய மக்களின் தேவைகள் என்ன என்பதை புரிந்து கொள்ளாமல் இடிந்துபோன வீட்டிற்கு மேல்பூச்சு பூசுவது போல் செயல்படக் கூடாது.

தமிழக அரசியலில் நேர்மை இல்லை. வாக்குக்கு மட்டுமே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரை பயன்படுத்துகிறார்கள். இனிமேல், வெளிப்படையாக இருந்தால் மட்டுமே கைகோர்ப்போம். இல்லை என்றால் நாம் முன்னால் செல்வோம் ,பின்னால் அவர்கள் வருவார்கள் என்று தெரிவித்தார்.

நெல்லையில் மாநாடு:

இதுபோல் புதிய தமிழகம் கட்சி சார்பில் தமிழக வளர்ச்சி அரசியல் மாநாடு நேற்று இரவு நடைபெற்றது. இந்த மாநாட்டிலும் அக்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பங்கேற்றுப் பேசினார்.

SCROLL FOR NEXT