தமிழகம்

சுருளிதீர்த்தம் ஆதி அண்ணாமலையார் கோயில் அன்னதான மண்டபம் இடிப்பு: தேனி ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

கி.மகாராஜன்

சுருளி தீர்த்தம் ஆதி அண்ணாமலையார் கோயில் அன்னதான மண்டபம் இடிப்பு தொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தேனி சுருளி தீர்த்தம் ஆதி அண்ணாலையார் கோயில் பூஜாரி முருகன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

சுருளி தீர்த்தம் அருகே ஆற்றங்கரையில் 200 ஆண்டு பழமையான ஆதி அண்ணாமலையார் கோயில் உள்ளது.

இந்தக் கோவிலில் ஒரே கல்லிலான 500 கிலோ எடையுள்ள சிவலிங்கம் உள்ளது. இந்த கோவிலை இடிக்க சுருளிபட்டி ஊராட்சி செயலர் 2018-ல் நோட்டீஸ் அனுப்பினார். அதற்கு முறைப்படி விளக்கம் அளித்தேன். பின்னர் இந்து சமய அறநிலையத்துறை ஏற்க மனு அளித்தேன்.

இந்நிலையில் கோவில் அருகே வணிக வளாகம் கட்டி வரும் பழனிவேல், கோயில் அன்னதான மண்டபத்தை இடித்து வாகனம் நிறுத்தம் அமைக்க முயற்சித்து வருகிறார். அவருக்கு ஆதரவாக பொதுப்பணித்துறை உதவி செயற் பொறியாளர் பிரேம் ராஜ்குமார் கோயில் அன்னதானம் கூடத்தை இடித்தார்.

எனவே, ஆதி அண்ணாமலையார் கோயிலில் தினமும் நடைபெறும் பூஜை நடவடிக்கைகளில் தலையிடவும், கோவில் கட்டிடத்தை இடிக்க தடை விதித்தும், பொதுப்பணித்துறை உதவி செயற் பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT