தமிழகம்

மானாமதுரை அருகே அரசு கொள்முதல் நிலையம் திறக்காததால் 3 ஆயிரம் நெல் மூடைகளுடன் 20 நாட்களாக காத்திருக்கும் விவசாயிகள்

இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ராஜகம்பீரத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் 3 ஆயிரம் நெல் மூடைகளுடன் 20 நாட்களாக விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலைக்கு வியாபாரிகள் நெல் கொள்முதல் செய்வதைத் தடுக்க அரசு நேரடி கொள்முதல் நிலையங்களைத் திறக்கிறது.

அதன்படி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் சிவகங்கை மாவட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

ஆனால் கடந்த ஆண்டு கொள்முதல் நிலையம் திறக்கப்பட்ட மானாமதுரை அருகே ராஜகம்பீரத்தில் இந்தாண்டு திறக்கப்படவில்லை. இதனால் 20 நாட்களாக விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூடைகளுடன் இரவு, பகலாகக் காத்திருக்கின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:

மாவட்டத்தில் பல இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் 20 நாட்களுக்கு மேலாகியும் ராஜகம்பீரத்தில் திறக்க மறுக்கின்றனர். இதனால் நெல் மூடைகளுடன் காத்திருக்கிறோம். சிலர் காத்திருக்க முடியாமல் குறைந்த விலைக்கு வியாபாரிகளிடம் விற்றுவிட்டனர்.

இதேநிலை தொடர்ந்தால் நாங்களும் குறைந்தவிலைக்கு நெல் மூடைகளை விற்கும்நிலை ஏற்படும். இதனால் மாவட்ட ஆட்சியர் உடனடியாக நெல் கொள்முதல் நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறினார்

SCROLL FOR NEXT