தமிழகம்

தமிழக முதல்வர் பழனிசாமி நாளை தூத்துக்குடியில் தேர்தல் பிரச்சாரம்: பிரதமர் மோடி பங்கேற்கும் விழாவில் காணொலி காட்சி மூலம் இணைகிறார்

ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி- ராமநாதபுரம் இடையே ரூ.700 கோடி செலவில் இந்தியன் ஆயில் கார்பரேசன் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இயற்கை எரிவாயு குழாயை பிரதமர் நரேந்திர மோடி நாளை (பிப்.17) காணொலி காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

இந்த விழாவில் தமிழக முதல்வர் கே.பழனிசாமி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் பங்கேற்கிறார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

4 தொகுதிகளில் பிரச்சாரம்:

தமிழக முதல்வர் கே.பழனிசாமி தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி ஆகிய நான்கு சட்டப்பேரவைth தொகுதிகளில் நாளை தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

இதற்காக அவர் நாளை காலை 10.15 மணிக்கு விமானம் மூலம் தூத்துக்குடி வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்படுகிறது.

தொடர்ந்து முற்பகல் 11 மணியளவில் ஸ்ரீவைகுண்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். பின்னர் 12 மணியளவில் திருச்செந்தூரில் மகளிர் குழுவினருடன் கலந்துரையாடும் முதல்வர், பகல் 1 மணியளவில் ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட இளைஞர்கள், இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகளுடன் தூத்துக்குடியில் வைத்து கலந்துரையாடுகிறார். பின்னர் மாலை 6 மணியளவில் தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

முதல்வரின் சுற்றுப்பயணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரான அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ ஆகியோர் செய்துள்ளனர்.

பிரதமர் விழாவில் பங்கேற்பு:

இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் விழாவில் தமிழக முதல்வர் கே.பழனிசாமி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் பங்கேற்கிறார்.

இந்தியன் ஆயில் கார்பரேசன் சார்பில் ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி வரை 143 கி.மீ., தொலைவுக்கு ரூ.700 கோடி செலவில் இயற்கை எரிவாயு குழாய் பதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் சென்னை மணலியில் கேசோலைன் கந்தகம் அகற்றும் யூனிட் ரூ.500 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. நிறைவடைந்த இந்த 2 திட்டங்களையும் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் நாளை (பிப். 17) மாலை 4.30 மணியளவில் நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார்.

இதே விழாவில் நாகப்பட்டினத்தில் காவிரி படுகையில் ரூ.31,500 கோடி மதிப்பீட்டில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கான பணிகளையும் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் மோடி பங்கேற்கும் இந்த விழாவில் தமிழக முதல்வர் கே.பழனிசாமியும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் பங்கேற்கிறார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து வந்த சிறப்பு குழுவினர் காணொலி காட்சிக்கான அனைத்து வசதிகளையும் செய்துள்ளனர்.

முதல்வர் வருகையை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தலைமையில் போலீஸார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT