"சீமான் போன்றவர்கள் தமிழக அரசை குறை சொல்லி என்ன ஆகபோகுது" என கதர்கிராமத் தொழில்கள் நலவாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தெரிவித்தார்.
அமைச்சர் பாஸ்கரன் இன்று சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே பாப்பான்கண்மாயில் குளத்தில் மூழ்கி இறந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு தனது சொந்தப் பணத்தில் ரூ.20 ஆயிரத்தை வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சீமான் அதிமுக ஆட்சியில் தமிழகம் வெற்றி நடை போடாது என்று சொல்லியுள்ளார். அவரைப் போன்றோர் தமிழக அரசைக் குறை சொல்லி என்ன ஆகப்போகிறது.
மேலும் குறை சொல்வதே எதிர்க்கட்சிகளின் வேலையாக உள்ளது. தமிழகம் வெற்றி நடை போடுவதும், விவசாயிகளுக்கு பழனிசாமி அரசு வழங்கியுள்ள சலுகைகள் குறித்தும் மக்களுக்குத் தெரியும்.
பயிர்க்கடன் தள்ளுபடி, பொங்கல் பரிசு போன்றவை அறிவித்ததால் அதிமுக வெற்றியை நோக்கிச் செல்கிறது. இதனால் எதிர்க்கட்சிகள் பொறாமைப்படுகின்றன.
பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றபோது ஆட்சி சில நாட்களிலேயே கவிழ்ந்துவிடும் என நினைத்தனர். ஆனால் அதையெல்லாம் மீறி வீறுகொண்டு செயல்படுகிறது. இரண்டு நாட்களில் காளையார்கோவிலில் புதிய பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்படும்.
கல்லலில் இடப்பிரச்சினையால் புதிய பேருந்து நிலையத்திற்கு தாமதம் ஏற்படுகிறது. அதற்கும் மாவட்ட ஆட்சியருடன் பேசி விரைந்து தீர்க்கப்படும், என்று கூறினார்.