தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான நிலம் எடுப்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று காலை திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வந்தார். கோயிலுக்குள் சென்ற அவர் மூலவர், சண்முகர் உள்ளிட்ட அனைத்து சுவாமி சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
தமிழக முதல்வர் கே.பழனிச்சாமி விவசாயிகளின் நலன் காக்கும் முதல்வராகவும், சமூக நீதி காவலராகவும், தொழில் முதலீட்டை பொறுத்தவரை இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் பொருளாதார சிற்பியாகவும் திகழ்கிறார். அதேபோல் வேளாண்மை துறையிலும் சரித்திர சாதனைகள் படைத்து வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. அதற்கான நிலம் எடுப்புp பணி மத்திய அரசு பாராட்டக்கூடிய வகையில் துரிதமாக நடைபெற்று வருகிறது.
ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனம் நீண்ட கால ஒப்பந்தத்தில் குறைந்த வட்டி விகிதத்தில் கடன்கள் தருகிறது. அந்த நிதியை பயன்படுத்திதான் பல மாவட்டங்களில் புதிய நவீன மருத்துவமனை கட்டிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை மிக பிரமாண்டமாக உருவாக்குவதற்காக ஜைக்கா நிறுவனம் கடன் தருவதற்கு முன்வந்துள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட உள்ள இடத்தை சுற்றி சுவர் எழுப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மத்திய அரசின் கோரிக்கை படி அருகில் ரயில் நிலையம், பேருந்து நிலையம், நான்குவழி சாலை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
எய்ம்ஸ் மருத்துவமனை தடைகளை தாண்டி அனைத்து சிறப்பு வசதிகளுடன் அமையும். இந்த மருத்துவமனையை கொண்டுவருவதற்கு அனைத்து தரப்பினரின் பங்களிப்பும் உள்ளது. இதில் எந்த பங்களிப்பு இல்லாத திமுகவினர் தான் குறை கூறுகிறார்கள்.
திமுக இதுவரை தனது தேர்தல் அறிக்கைகளில் மக்களுக்கான எந்த திட்டங்களையும் கொடுக்கவில்லை. நிறைவேற்ற முடியாத கவர்ச்சிகரமான, வசீகரமான, பொய்யான திட்டங்களையே வாக்குறிதியாக கொடுக்கின்றனர்.
கடந்த மக்களவைத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் இதுவரை நிறைவேற்ற திமுக வலியுறுத்தவில்லை. அதிமுக கூட்டணியை பொறுத்தவரை கடந்த தேர்தலில் தொடர்ந்த வெற்றி கூட்டணியே இந்தத் தேர்தலில் தொடரும் இவ்வாறு அமைச்சர் உதயகுமார் கூறினார்.