புதுச்சேரி அரசுக்குப் பெரும்பான்மை உள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக ஏற்கெனவே ராஜினாமா கடிதம் தந்திருந்த புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று (பிப்.15) மாலை எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருந்த சூழலில், இன்று (பிப்.16) காலை ஜான்குமாரும் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். ராகுல் நாளை புதுச்சேரி வரும் சூழலில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமாவைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சித் தலைமை அலுவலகத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் ராகுல் காந்தி நாளை புதுவைக்கு வந்து சென்றபின் எந்த முடிவையும் எடுக்கலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்துக்குப் பின் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர்கள் ரோடியர் மில் திடலுக்கு வந்தனர். ராகுல் காந்தி பங்கேற்கும் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணியைப் பார்வையிட்டனர். பின்னர், முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், "எங்கள் அரசுக்குப் பெரும்பான்மை உள்ளது. அரசியல் சட்ட விதிமுறைகளின்படி செயல்படுவோம்" எனத் தெரிவித்தார்.
புதுச்சேரி காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்ததால் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறியுள்ளார்களே எனக் கேட்டபோது, "எதிர்க்கட்சிகள் அப்படித்தான் கூறுவார்கள். எங்கள் அரசுக்கு மெஜாரிட்டி உள்ளது" எனத் தெரிவித்தார்.
அரசு கொறடா அனந்தராமன் கூறுகையில், "எங்களிடம் இருந்து இரு எம்எல்ஏக்கள் அங்கு சென்றால், அங்கிருந்து (எதிர்க்கட்சிகளிடமிருந்து) இரு எம்எல்ஏக்கள் காங்கிரஸுக்கு வருவார்கள்" என்று தெரிவித்தார்.
தற்போது புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசுத் தரப்பில் 14 எம்எல்ஏக்களும், எதிர்க்கட்சிகள் தரப்பில் 14 எம்எல்ஏக்களும் உள்ள சரிசமமான சூழலே நிலவுவது குறிப்பிடத்தக்கது.