மணியாச்சி அருகே சாலை விபத்தில் உயிரிழந்த 5 விவசாயப் பெண் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கும் தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி அருகே உள்ள மணப்படை வீடு, திருமலைக்கொழுந்துபுரம், மணல்காடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 31 பெண் விவசாயத் தொழிலாளர்கள் சுமை ஆட்டோவில் இன்று (பிப். 16) காலை தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி, புதியம்புத்தூர் பகுதியில் நடைபெறும் உளுந்து செடிகள் பறிக்கும் பணிக்காக வந்தனர்.
ஆட்டோவைத் திருமலைக்கொழுந்துபுரத்தைச் சேர்ந்த சித்திரை (50) என்பவர் ஓட்டினார். இதில், 15 பேர் மணியாச்சி பகுதி நிலங்களில் நடைபெறும் பணிக்கும், 16 பேர் புதியம்புத்தூர் அருகே சவரிமங்கலத்தில் நடைபெறும் பணிக்கும் அழைத்து வரப்பட்டனர்.
மணியாச்சி காவல் நிலையத்துக்கு முன்பு சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள 'எஸ்' வளைவில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த சுமை ஆட்டோ, சாலையோரம் இருந்த பாலத்தில் மோதி, காற்றாற்று ஓடையில் கவிழ்ந்தது. ஓடையில் அதிக அளவு தண்ணீர் இல்லையென்றாலும், சுமை ஆட்டோவில் அளவுக்கு அதிகமான ஆட்கள் இருந்த நிலையில் ஒருவர் மேல் ஒருவர் விழுந்ததால், அனைவரும் இடிபாடுகளில் சிக்கி அலறினர். சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதில், மூச்சுத் திணறி திருநெல்வேலி மாவட்டம் மணப்படை வீடு அம்பேத்கர் நகரைச் சேர்ந்த கலைச்செல்வன் மனைவி பேச்சியம்மாள் (30), சுடலை மனைவி ஈஸ்வரி (27), கணேசன் மனைவி மலையரசி (48), மனோகரன் மனைவி பேச்சியம்மாள் (54), வேலு மனைவி கோமதி (65) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது தொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன் முகநூல் பக்கத்தில், "நெல்லையிலிருந்து விவசாயப் பணிக்காகச் சரக்கு வாகனத்தில் சென்ற பெண் தொழிலாளர்கள் 5 பேர் மணியாச்சி அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
சாலைப் பாதுகாப்பு மாதம் கடைப்பிடிக்கப்படும் நிலையில் பாதுகாப்பற்ற பயணங்களை மேற்கொள்ளும் சூழலுக்குத் தள்ளப்படும் ஏழைத் தொழிலாளர்களின் அவல நிலை தொடர்கிறது.
உயிரிழந்த பெண் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டைத் தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும்!" எனத் தெரிவித்துள்ளார்.