அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக ஏற்கெனவே ராஜினாமா கடிதம் தந்திருந்த சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று மாலை எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருந்த சூழலில், இன்று காலை ஜான்குமாரும் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
ராகுல் நாளை புதுச்சேரி வரும் சூழலில் பெரும்பான்மையை காங்கிரஸ் அரசு இழந்துள்ளது.
புதுச்சேரியில் நான்கு பிராந்தியங்கள் உள்ளன. ஆந்திரம் அருகேயுள்ள ஏனாம் பிராந்தியத்தின் எம்எல்ஏவான புதுவை சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் மல்லாடி கிருஷ்ணாராவ். இவர் கடந்த மாதமே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் தந்தும் முதல்வர் நாராயணசாமி அதை ஏற்காமல் இருந்தார்.
இச்சூழலில் நேற்று மாலை தனது எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்தார். ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு நெருக்கமாக இருக்கும் மல்லாடி கிருஷ்ணாராவ் திருப்பதி தேவஸ்தான இயக்குநர் பதவிக்கு அழைப்பு வந்துள்ளதால் அதில் ஈடுபட உள்ளதாகவும், வரும் எம்எல்ஏ தேர்தலில் நானோ, எனது குடும்பத்தினரோ போட்டியிட மாட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இச்சூழலில் இன்று காலை சட்டப்பேரவைக்கு வந்த ஜான்குமார் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் கடிதம் தந்தார். கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடாத நாராயணசாமி முதல்வரானார். அவர் போட்டியிடுவதற்காக தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து நெல்லித்தோப்புத் தொகுதியில் நாராயணசாமி வெல்ல பிரச்சாரம் செய்தார்.
அதையடுத்து முதல்வர் அவருக்கு அமைச்சர் பதவி தராததால் கோபத்தில் இருந்தார். பின்னர் காமராஜ் நகர் தொகுதி எம்எல்ஏவாக இருந்த வைத்திலிங்கம் எம்.பி. தேர்தலில் வென்றதால், அத்தொகுதியில் போட்டியிட்டு ஜான்குமார் எம்எல்ஏவானார். அண்மையில் பாஜக மேலிடத்தில் தொடர்புகொண்டு பேசி இருந்தார். இந்நிலையில் இன்று காலை தனது எம்எல்ஏ பதவியை ஜான்குமார் ராஜினாமா செய்துள்ளார்.
ராகுல் காந்தி நாளை புதுச்சேரி வரவுள்ள சூழலில் அடுத்தடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.
காங்கிரஸ் ஆட்சிக்கு ஆபத்து; சமபலத்தில் ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி
புதுவை சட்டப்பேரவையில் 3 பாஜக நியமன எம்எல்ஏக்களுடன் மொத்தம் 33 எம்எல்ஏக்கள் இருப்பார்கள். அதில் காங்கிரஸ் எம்எல்ஏ தனவேலு நீக்கப்பட்டார். புதுவை சட்டப்பேரவையில் 32 எம்எல்ஏக்கள் இருந்தனர். அதைத் தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் ஆகியோர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததால் தற்போது சபையில் 30 எம்எல்ஏக்கள் இருந்தனர். தற்போது மல்லாடி கிருஷ்ணாராவும், ஜான்குமாரும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததால் 28 எம்எல்ஏக்களே உள்ளனர்.
சபையில் உள்ள எம்எல்ஏக்கள் அடிப்படையில் 15 எம்எல்ஏக்கள் பலம் இருந்தால் மெஜாரிட்டி கிடைக்கும். ஆளுங்கட்சியான காங்கிரஸில் 10 பேரும், கூட்டணிக் கட்சி திமுகவில் 3 பேரும், சுயேச்சை எம்எல்ஏ ஒருவரின் ஆதரவும் என மொத்தம் 14 பேர் ஆதரவு உள்ளது.
எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸில் 7 பேரும், அதிமுகவில் 4 பேரும், பாஜகவில் நியமன எம்எல்ஏக்கள் 3 பேர் என 14 எம்எல்ஏக்கள் உள்ளனர். ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் தற்போது புதுச்சேரி சட்டப்பேரவையில் சம பலத்தில் உள்ளன. அதனால் ஆளுங்கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது.