தமிழகம்

முதல்வர் பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கு: நேரில் ஆஜராக ஸ்டாலினுக்கு சம்மன் 

செய்திப்பிரிவு

தமிழக முதல்வர் பழனிசாமி தரப்பில் தொடரப்பட்டுள்ள அவதூறு வழக்கில் திமுக தலைவர் ஸ்டாலின் பிப்ரவரி 25-ம் தேதி நேரில் ஆஜராக எம்.பி. மற்றும் எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

சென்னை கொளத்துார் பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கடந்த ஆண்டு டிசம்பர் 7-ம் தேதி நிவாரண உதவிகளை திமுக தலைவர் ஸ்டாலின் வழங்கினார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழக முதல்வர் குறித்துப் பேசியிருந்தார். என்னை அறிக்கை நாயகன் என்று சொல்லும் முதல்வர் பழனிசாமி ஒரு ஊழல் நாயகன் என ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

ஸ்டாலினின் கருத்து முதல்வரின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் இருப்பதாக முதல்வர் தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் அந்த வழக்கு சென்னை எம்.பி. மற்றும் எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் முதலாவது சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி கே.சுதா முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவதூறு வழக்கு தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வரும் 25-ம் தேதி நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT